அகமதாபாத்: : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் அகமதாபாத்தில் இன்று (மார்ச்.31) நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசஸ் ஐதரபாத் அணிகள் பலப்பரீடை நடத்தின. டாஸ் வென்ற சன்ரைசஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் விளையாடிய சன்ரைசஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தன. அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 29 ரன்களும், அப்துல் சமாத் 29 ரன்களும் எடுத்தனர். கடந்த மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தின் நாயகன் ஹென்ரிச் கிளாசென் 24 ரன்கள் மட்டும் எடுத்து பெரிய அளவில் சோபிக்காமல் ஏமாற்றம் அளித்தார்.
இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா மற்றும் கேப்டன் சுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 36 ரன்கள் சேர்த்தது.
விருத்திமான் சஹா 25 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஷபாஸ் அகமது பந்துவீச்சில் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடிய அணியின் ரன் கணக்கை சீரான வேகத்தில் கொண்டு சென்றார்.
இதனிடையே கேப்டன் சுப்மான் கில் தன் பங்குக்கு 36 ரன்கள் எடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே களமிறங்கிய டேவிட் மில்லர், மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சாய் சுதர்சனுடன் இணைந்து வாண வேடிக்கை காட்டினார். அரை சதத்தை நோக்கி சென்ற சாய் சுதர்சன் இறுதியில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அபாரமாக விளையாடிய டேவிட் மில்லர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் 19 புள்ளி 1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி 168 ரன்கள் குவித்தது. 19வது ஓவரின் முதல் பந்தை அட்டகாசமாக சிக்சருக்கு பறக்கவிட்ட டேவிட் மில்லர் குஜராத் அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.
இதன் மூலம் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் மில்லர் 44 ரன்களுடனும், தமிழக வீரர் விஜய் சங்கர் 14 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர். ஐதராபாத் அணி தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ், ஷபாஸ் அகமது, மயங்க் மார்கண்டே ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையும் படிங்க : GT Vs SRH: குஜராத்துக்கு 163 ரன்கள் டார்கெட்! சொதப்பிய ஹென்ரிச், டிராவிஸ் ஹெட்! யாருக்கு வெற்றி? - IPL 2024