ஐதராபாத்: கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் அணியின் வெள்ளைப் பந்து கிரிக்கெட் பார்மட்டின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படியில் பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கேரி கிர்ஸ்டன் 6 மாதங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட உள்ள நிலையில், கேரி கிர்ஸ்டன் பதவி விலகி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பியை (Jason Gillespie) புதிய தலைமை பயிற்சியாளராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்து உள்ளது.
இவரது பயிற்சியின் கீழ் தான் அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றி வெற்றி வாகை சூடியது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டத்தை தொடர்ந்து கேரி கிர்ஸ்டனின் பயிற்சி கடும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
காரணம், அவரது பயிற்சியில் பாகிஸ்தான் குரூப் ஸ்டேஜைத் தாண்டவில்லை என்பதே கசப்பான உண்மை. கேரி கிர்ஸ்டன் பெரிய வெற்றிகளைக் கண்ட ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இல்லாமல் விலகியுள்ளார். அதேநேரம் கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியா ஒருநாள் உலகக் கோப்பையை தோனி தலைமையில் வென்ற போது கேரி கிர்ஸ்டன் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The Pakistan Cricket Board today announced Jason Gillespie will coach the Pakistan men’s cricket team on next month’s white-ball tour of Australia after Gary Kirsten submitted his resignation, which was accepted.
— Pakistan Cricket (@TheRealPCB) October 28, 2024
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் கேரி கிர்ஸ்டனுக்கும் இடையே நீண்ட காலமாக புகைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. அணியில் வீரர்கள் தேர்வில் கேரி கிர்ஸ்டனோ, ஜேசன் கில்லஸ்பியோ தலையிட முடியாத அளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடந்து கொண்டதே இந்த திடீர் ராஜினாமாவுக்கு காரணம் என்ன சொல்லப்படுகிறது.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பின்னர் அடுத்த ஆண்டு பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பை தொடரை நடத்துகிறது. இந்நிலையில், கேரி கிர்ஸ்டன் விலகி இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய தொடரை தொடர்ந்து பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட உள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே தொடருக்கான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்வதில் கேரி கிர்ஸ்டன் மற்றும் கிரிக்கெட் வாரியத்துக்கு இடையே ஏற்பட்ட மனக் கசப்பே இந்த திடீர் ராஜினாமாவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "முதல் தர போட்டிகள்ல முதல்ல கவனம் செலுத்துங்க"- தினேஷ் கார்த்திக் பரிந்துரை யாருக்கு?