ஐதராபாத்: உத்தர பிரதேச முன்னாள் அமைச்சரும், மாநில ஹஜ் கமிட்டி தலைவர் மற்றும் முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரருமான மொஹ்சின் ராசா, மாநில கிரிக்கெட் வாரியத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இளைஞர்களிடம் பணம் பறிப்பது, பணத்தை தவறாக பயன்படுத்துவது, அரசு சொத்துகளை துஷ்பிரயோகம் செய்வது உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக மொஹ்சின் ராசா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தில் நடைபெறும் ஊழல் தொடர்பாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து மொஹ்சின் ராசா புகார் அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், உத்தர பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தில் தான் விளையாடி போது இருந்த நிர்வாகம் தற்போது இல்லை என்றும், தற்போது உள்ள இயக்குநர்கள் குழு பல்வேறு ஊழல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மூத்த காங்கிரஸ் நிர்வாகி இந்த ஊழல்களுக்கு காரணமாக உள்ளதாகவும், உத்தர பிரதேச கிரிக்கெட் சங்க செயலாளர் ஜோதி பஜ்பை உதவியுடன் சங்கத்தில் நுழைந்து அனைத்து விதமான ஊழல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். அவரது வருகைக்கு பின் சங்கம் தனியார் நிறுவனம் போல் மாறியதாகவும், ஜோதி பஜ்பையும் வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார்.
அணிகளில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு பணம் வசூலிக்கப்படுவதாகவும், தரம் வாரியாக வீரர்களிடம் பணம் வாங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 16 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் வழங்க 6 லட்ச ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் சேர 20 லட்ச ரூபாய் பணம் வாங்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் வீரர்களிடம் 30 லட்ச ரூபாயும், ரஞ்சிக் கோப்பைக்கான அணியில் 30 முதல் 50 லட்ச ரூபாய் வரை பணம் வசூலிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கம் லாபம் நஷ்டம் நோக்கம் இன்றி இயங்குவதாக கூறி வரும் நிலையில், 100 கோடி ரூபாய் வரை கடன் இருப்பதாக வருமான வரித்துறையிடம் இருந்து எதற்கு நோட்டீஸ் வர வேண்டும் என மொஹ்சின் ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே அணியில் விராட் கோலி, பாபர் அசாம்! 17 ஆண்டுகளுக்கு பின் ஒரு போட்டி!