ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 27ஆம் தேதி தொடங்கி, 28 மற்றும் 30ஆம் தேதிகளில் பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. அதேபோல், ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொழும்பு சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
Shocked and surprised not to see Ruturaj Gaikwad in the Indian Team for both T20I and ODIs.
— S.Badrinath (@s_badrinath) July 20, 2024
My Thoughts 🎥🔗 https://t.co/EBKnryFSUM#INDvSL #CricItWithBadri pic.twitter.com/OilIH1J4CB
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியை பிசிசிஐ கடந்த வியாழன் அன்று அறிவித்தது. இதில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படும் எனத் தகவல் வெளியான நிலையில், இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படவுள்ளார்.
இந்த அணியை பிசிசிஐ அறிவித்ததில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்திய அணி சமீபத்தில் விளையாடிய ஜிம்பாப்வே உடனான தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இலங்கை சுற்றுப் பயணத்தில் வாய்ப்பு வழங்காதது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. மேலும், ரிங்கு சிங்கையும் ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகின்றன.
இதற்கு மத்தியில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் தேர்வு குறித்து இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறுகையில், “இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் எந்த வித காரணங்களுக்காக இந்த அணியில் சேர்க்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், ருதுராஜ் இந்திய அணிக்கு அவர் இடம் பெற்ற அனைத்துப் போட்டிகளிலுமே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
உள்ளூர் போட்டிகளில் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான அவர் விளையாடிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார். இதனால், தான் மிகவும் வேதனையடைந்ததாகவும், ருதுராஜ் கெய்க்வாட்டை அணியில் சேர்க்காதது மிகப்பெரிய தவறு என்றும்,
ஒருவேளை இந்திய அணியில் இடம்பெற வேண்டுமானால் சில பாலிவுட் நடிகைகளுடன் தொடர்பு, புரோமோசன்ஸ், மேலும் உடம்பில் பச்சை குத்திக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என தோன்றுகிறது” எனத் தெரிவித்தார். ருதுராஜ் ஜிம்பாப்வே உடனான தொடரில் விளையாடிய ஆட்டங்களில் ஒரு போட்டியில் 77 ரன்களும், மற்றொரு போட்டியில் 49 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆஹா என்ன ருசி.. நெல்லை இருட்டுக் கடை அல்வாவை ருசித்த அஸ்வின்!