சென்னை: 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் இறுதிச் சுற்றில் இந்திய ஆடவர் அணி ஸ்லோவேனியாவையும், மகளிர் அணி அஜர்பைஜானையும் எதிர்கொண்டு வெற்றி பெற்று இரண்டு தங்கப் பதக்கம் வென்றது.
இதற்கு முன்பு 2014 மற்றும் 2022இல் இரண்டு வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்தியா, 2020இல் கோவிட்-19 இன் போது நடந்த ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டியில், ரஷ்யாவுடன் தங்கத்தைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், 90 ஆண்டுகளாக செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக தனியாக தங்கம் வென்றுள்ளது இந்திய அணி.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஆடவர் அணியில் பங்கேற்ற பிரக்ஞானந்தா, மகளிர் அணியில் பங்கேற்ற வைஷாலி, இந்திய செஸ் ஒலிம்பியாட் அணியின் கேப்டன் ஸ்ரீநாத் ஆகிய மூவரும் விமானம் மூலம் நாடு திரும்பி உள்ளனர்.
சென்னை வந்தடைந்த அவர்களுக்கு, விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீநாத்: இதையடுத்துச் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய செஸ் ஒலிம்பியாட் இந்திய அணி கேப்டன் ஸ்ரீநாத் கூறுகையில்,
"45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் அணி முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று உள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றுள்ளோம். ஏற்கனவே ரஷ்யாவுடன் இணைந்து ஒரு தங்கப்பதக்கத்தை பெற்று உள்ளோம். ஆனால், தற்போது தனித்து தங்கப் பதக்கத்தை வென்று உள்ளோம். இந்தியா தான் சிறந்த அணி என காட்டும் அளவிற்கு அதிக புள்ளிகள் உடன் வெற்றி பெற்றுள்ளோம்.
வைஷாலி: மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலப் பதக்கம் வென்று இருந்தோம். அப்போது தங்கப்பதக்கம் வெல்ல முடியாதது மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால், தற்போது தங்கப் பதக்கம் வென்று இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய ஆடவர் அணி அதிக புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், பெண்கள் அணி ஒரு போட்டியில் தோல்வியடைந்து, மற்ற இரு போட்டிகளை வென்றாக வேண்டிய நேரத்தில் இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற்று பதக்கத்தை வென்று உள்ளோம்" என்றார்.
பிரக்ஞானந்தா: கடந்த முறை சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது மிகவும் நெருக்கத்தில் வந்து தங்கப் பதக்கத்தை தவறவிட்டோம். இந்த முறை அதிக புள்ளிகள் உடன் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. விளையாடிய அனைத்து போட்டிகளும் கடுமையாகவே இருந்தது. முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை தோற்கடித்ததும், நம் நாட்டிற்கு தங்கப் பதக்கம் உறுதியாகிவிட்டது. அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதையும் படிங்க: முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி; மகாராஷ்டிராவை வீழ்த்திய ரயில்வே அணி.. போபாலுக்கு எதிராக கர்நாடகா த்ரில் வெற்றி!