ஐதராபாத்: முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அவரது பணி தொடரும் என ராஜஸ்தான் ராயலஸ் அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியின் கீழ் இந்திய அணி அண்மையில் 20 ஓவர் உலகக் கோப்பை தொடரை வென்று வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வீரர்கள் மெகா ஏலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் ராகுல் டிராவிட்டை தலைமை பயிற்சியாளராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 மற்றும் 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட், தொடர்ந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநர் மற்றும் ஆலோசகராக பணியாற்றினார். அதன்பின் 2016ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போதைய டெல்லி கேபிட்டல்ஸ்) அணிக்கு மாறிய ராகுல் டிராவிட், 2019ஆம் ஆண்டு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் வரை அங்கேயே இருந்தார்.
🚨 RAHUL DRAVID HAS BEEN APPOINTED AS RAJASTHAN ROYALS' HEAD COACH...!!! 🚨 (Espncricinfo). pic.twitter.com/H8lFGG6lGU
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 4, 2024
அதன்பின் 2021ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட்டை தொடர்ந்து முன்னாள் இந்திய அணியின் வீரர் விக்ரம் ராத்தோரை துணை பயிற்சியாளராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னாள் தேர்வு குழு உறுப்பினர், மற்றும் ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்த போது அவரது அணியில் பயிற்சியாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.
2008ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்ட போது முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பை வென்றது. அதன்பின் ஏறத்தாழ 16 ஆண்டுகளாக ராஜஸ்தான் அணி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. ராகுல் டிராவிட் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்திருப்பதால் இந்த முறை ராஜஸ்தான் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
இதையும் படிங்க: புதிதாக 18 கால்பந்து மைதானங்கள்- உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு! - 18 football stadium in UttarPradesh