தர்மசாலா : நடப்பு சீசனுடன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விடை பெற தமிழக விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் தினேஷ் கார்த்திக் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரே தினேஷ் கார்த்திக்கிற்கு கடைசியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
38 வயதான தினேஷ் கார்த்திக் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 16 ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் இதுவரை இரண்டு ஐபிஎல் போட்டிகளை மட்டுமே தவறவிட்டு உள்ளார்.
2024ஆம் ஆண்டுடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவும், சர்வதேச கிரிக்கெட் குறித்து யோசனை செய்யவும் அவர் திட்டமிட்டு உள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், கடந்த 16 சீசனில் இதுவரை 6 அணிகளுக்காக விளையாடி வருகிறார்.
2008 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கிய தினேஷ் கார்த்திக், தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் ஜொலித்ததை அடுத்து அந்தாண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இணைந்த தினேஷ் கார்த்திக், விராட் கோலி உள்ளிட்ட வீரர்களின் ஆதிக்கத்தால் சரிவர ஜொலிக்க முடியாமல் போனார். மேலும் அந்த தொடரில் இந்திய அணி அரைஇறுதியில் வெளியேறியது.
ஏறத்தாழ 26 டெஸ்ட், 94 ஒருநாள் கிரிக்கெட் உள்ளிட்ட ஆட்டங்களில் விளையாடிய உள்ள தினேஷ் கார்த்திக் கடந்த 2022ஆம் ஆண்டு வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 242 ஆட்டங்களில் விளையாடி உள்ள தினேஷ் கார்த்திக் 4 ஆயிரத்து 516 ரன்கள் குவித்து உள்ளர். கிரிக்கெட்டை தொடர்ந்து சிறந்த வர்ணனையாளராகவும் தனது திறமையை நிருபித்து வருகிறார் தினேஷ் கார்த்திக்.
இதையும் படிங்க : WPL T20 Cricket: அதிவேகமாக பந்து வீசி சாதனை! மும்பை வீராங்கனை சப்னிம் இஸ்மாயில் அசத்தல்!