சென்னை: மகேந்திர சிங் தோனி ஜூலை 7, 1981ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பிறந்தார். இவரது பள்ளிப்படிப்பை ராஞ்சியில் உள்ள டிஏவி ஜவஹர் வித்யா மந்திரில் பயின்றார். இவர் தனது பள்ளிப்பருவத்தில் பூப்பந்து மற்றும் கால்பந்தில் சிறந்து விளங்கினார்.
கிரிக்கெட் பயணம் தொடங்கிய தருணம்: இவர் தனது பள்ளி கால்பந்து அணிக்காக கோல் கீப்பராக செயல்பட்டார். பின்னர் கால்பந்து பயிற்சியாளர் உந்துதலின் பேரில் உள்ளூர் கிரிக்கெட் கிளப் ஒன்றுக்காக கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். அங்கு தனது அசாத்தியமான விக்கெட் கீப்பிங் திறமையால் ஈர்க்கப்பட்டார். இதையடுத்து கமாண்டோ கிரிக்கெட் கிளப்பில் விக்கெட் கீப்பராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். பின்னர் 1997ல் 16 வயதுக்குட்பட்ட வினே மன்கட் டிராபி சாம்பியன்ஷிப் தொடருக்கான தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலும் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக காரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக சிறிது காலம் பணியாற்றினார்.
இந்தியாவிற்காக அறிமுகம்: தோனி தனது 18 வயதில் பீகார் அணிக்கான ரஞ்சி கோப்பையில்(1999-2000) அறிமுகமானார். தனது அறிமுகப் போட்டியிலேயே அசாம் அணிக்கு எதிராக அரைசதம் அடித்து அசத்தினார். ரஞ்சி கோப்பையில் இவரது அசத்தலான செயல்பாட்டின் அடிப்படையில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். 2004ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டிலும், 2006ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.
Leader in its truest sense 🫡
— BCCI (@BCCI) July 7, 2024
Wishing @msdhoni, former #TeamIndia Captain & one of the finest to have ever graced the game - a very happy birthday 🎂👏 pic.twitter.com/fGfY4bB0Ny
3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன்: பின்னர் 2007ல் உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டார். அவர் கேப்டனாக அறிமுகமான முதல் தொடரிலேயே இந்திய அணியை டி20 உலகச் சாம்பியனாக மாற்றினார்.தொடர்ந்து இந்திய அணிக்கு கேப்டனாக தனது சிறந்த பங்களிப்பை அளித்து வந்த தோனி 2011-ல் இந்திய அணியை 50 ஓவர் உலகக்கோப்பைக்கு அழைத்துச் சென்றார். அந்த தொடரில் இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில், 91 ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை (World Cup Cricket) வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அடுத்ததாக, இவர் தலைமையில் 2013-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் இந்திய அணி வென்றது. கிரிக்கெட் வரலாற்றிலே மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டனாக தோனி திகழ்கிறார்.
பன்முகத்திறமையால் இந்தியாவிற்கு ஆற்றிய பங்கு: தோனி இந்தியாவிற்காக மொத்தம் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,876 ரன்கள் குவித்திருக்கிறார். அதில், மொத்தம் 6 சதங்கள் மற்றும் 33 அரை சதங்கள் அடித்திருக்கிறார். மேலும், விக்கெட் கீப்பராக 256 கேட்சுகளும் 38 ஸ்டம்பிங்கும் செய்திருக்கிறார். 350 ஒருநாள் போட்டியில் 10 சதங்கள் ,72 அரை சதங்கள் உட்பட மொத்தம் 10,773 ரன்கள் அடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் 317 கேட்சுகளும் 122 ஸ்டம்பிங்குகளும் எடுத்துள்ளார். டி20 போட்டிகளை பொருத்தவரை, 98 போட்டிகள் விளையாடி 1,617 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக கேப்டனாக, பேட்ஸ்மேனாக, விக்கெட் கீப்பராக பன்முகத்திறமையுடன் சிறப்பாக செயலாற்றி வந்த தோனி, 2020 ஆகஸ்ட் 15 ஆம் நாள் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சிஎஸ்கேவின் தல தோனி: மேலும், ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக விளையாடி தமிழர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். இவர் சென்னை அணியை மொத்தம் 12 முறை அரையிறுதிப்போட்டிக்கு கூட்டிக்கொண்டு சென்றுள்ளார். அதில், 5 முறை கோப்பையை பெற்றுத்தந்து அசத்தியுள்ளார். இவ்வாறு இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த தோனி, இன்று (ஜூலை 7) தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையும் படிங்க: IND Vs ZIM; 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்தியா!