சென்னை: 17வது ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும். இந்த வருடம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், முன்கூட்டியே ஐபிஎல் போட்டிகள் மார்ச் ஏப்ரல் மாதங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனியின் கடைசி தொடராகப் பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்து சென்னை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், "திங்கட்கிழமை (08.04.2024) நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் ஆன்லைன் டிக்கெட் விற்பனையானது நாளை (05.04.2024) காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும்" என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி www.insider.in என்ற இணையதளத்தை மட்டுமே பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம் என கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது போட்டிக்கான டிக்கெட் விலை விவரங்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 1700 முதல் அதிகபட்சமாக 6000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் முறையே C, D, E லோயர் இருக்கைக்கு 1700 ரூபாயும், I, J, K அப்பர் இருக்கைக்கு 2500 ரூபாயும், I, J, K லோயர் இருக்கைக்கு 4000 ரூபாயும், C, D, E அப்பர் இருக்கைக்கு 3500 ரூபாயும், K, M, K மொட்டை மாடிக்கு 6000 ரூபாயும் என டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிக்கெட் பதிவு செய்பவர்கள் எந்த நுழைவுவாயில் வழியாக வர வேண்டும் என்பது குறித்தும், வாகனங்களை எங்கு நிறுத்த வேண்டும் என்பதும் குறித்தும், அதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளனர்.
சென்னை சிதம்பரம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் சென்னை அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திலிருந்தது அடுத்து டெல்லி அணியுடன் போட்டியில் தோல்வி தழுவியதால் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. வரும் (08.04.2024) திங்கட்கிழமை புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கொல்கத்தா அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஆல்ரவுண்ட் பர்பாமன்ஸ் கொடுத்த கேகேஆர்.. டெல்லியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி! - DC Vs KKR