சென்னை: ஐபிஎல் தொடரின் 46வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 3வது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரஹானே சன்ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ளத் தடுமாறிய நிலையில், 12 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால், அதன்பின் களம் வந்த டேரில் மிட்செல், கேப்டன் ருதுராஜுடன் சேர்ந்து ரன்களைக் குவித்தார். இந்த கூட்டணியை ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்களால் வீழ்த்த முடியவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடிக்க, அதனைத் தொடர்ந்து டேரில் மிட்செலும் அரைசதம் விளாசினார்.
107 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை ஜெய்தேவ் உனத்கட் வீழ்த்தினார். மிட்செல், நிதீஷ் ரெட்டியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். விக்கெட்கள் ஒருபக்கம் வீழ்ந்தாலும், ருதுராஜ் சதம் நோக்கிச் சென்றார். ஆனால், துருதிஷ்டவசமாக 98 ரன்களில் இருந்த போது, நடராஜன் பந்து வீச்சில் நிதீஷ் ரெட்டியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இருப்பினும், சிவம் துபே அதிரடி காட்ட, சென்னை அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டியது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. சிவம் துபே 39 ரன்களுடனும், தோனி 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஹைதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனத்கட் ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: சொந்த மண்ணில் குஜராத்தை ஊதித்தள்ளிய பெங்களூரு! வில் ஜேக்ஸ் சதம் விளாசல்! - IPL 2024 GT Vs RCB Match Highlights