தர்மசாலா: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.5) மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 53வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணியின் இன்னிங்சை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்ய ரஹானே ஆகியோர் தொடங்கினர். வழக்கம் போல் ரஹானே இந்த ஆட்டத்தில் சொதப்பினார். வெறும் 9 ரன்கள் மட்டும் எடுத்து ரஹானே ஏமாற்றம் அளித்தார்.
இதையடுத்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - டேடி மிட்செல் கூட்டணி அமைத்து விளையாடினர். சீரான இடைவெளியில் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக் கோட்டுக்கு அனுப்பி இருவரும் ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டம் சற்று மந்தமாகவே சென்றது. இந்த கூட்டணியை பஞ்சாப் வீரர் ராகுல் சஹர் பிரித்தார்.
அவரது பந்துவீச்சில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (32 ரன்) வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே அதே ராகுல் சஹரின் ஓவரில் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இதனிடையே சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய டேரி மிட்செல்லும் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஒரு புறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருக்க மறுபுறம் ரவீந்திர ஜடேஜா மட்டும் நிலைத்து நின்று விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மொயின் அலி 17 ரன், மிட்செல் சான்டனர் 11 ரன், ஷர்துல் தாகூர் 17 ரன் என ஆடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறி விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.
இதனிடையே களமிறங்கிய தோனி சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். ஹர்சல் பட்டேல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்ததால் சென்னை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசிக் கட்டத்தில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக காணப்பட்ட ரவீந்திர ஜடேஜாவும் 43 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டும் எடுத்தது. துஷார் தேஷ்பாண்டே (0 ரன்), ரிச்செர் கிளிசன் 2 ரன் ஆகியோர் களத்தில் நின்றனர். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்சல் பட்டேல், ராகுல் சஹர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டுகளும் கேப்டன் சாம் கரன் 1 விக்கெட்டும் வீழ்த்தி சென்னை அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: டாஸ் வென்று பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு! பிளே ஆப்க்கு தகுதி பெறும் அணி எது? - IPL2024 CSK VsPBKS Match Highlights