கராச்சி: பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாட இந்திய அரசு மறுத்தது குறித்து பிசிசிஐ எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.
கராச்சியில் பிப்ரவரி 19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. மார்ச் 9ஆம் தேதி லாஹூரில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இறுதிப் போட்டி நாளில் மழை உள்ளிட்ட ஏதேனும் காரணங்களால் போட்டி தடைபட்டால் அதற்கு பதிலாக மார்ச் 10ஆம் தேதி ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சில ஆட்டங்கள் ராவல்பிண்டியில் நடைபெறுகின்றன. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை கருதி இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடுவதை தவிர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஜூலை 19ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் ஐசிசியின் ஆண்டுக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவதற்கு பதிலாக இரு நாடுகளுக்கும் பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய விளையாடும் போட்டிகளை நடத்த பிசிசிஐ வலியுறுத்த உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதேநேரம் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட இந்திய அரசு மறுப்பு தெரிவித்தால் அதுகுறித்து பிசிசிஐ எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் கோரப்படுகிறது.
அதேநேரம் போட்டி நடப்பதற்கு 5 முதல் 6 மாதங்களுக்கு முன்னதாக பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடுவது குறித்து பிசிசிஐ தனது ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டும். இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான வரைவு அட்டவணையை தயாரித்து ஐசிசியிடம் வழங்கியுள்ளது.
அதன்படி பிப்ரவரி 19ஆம் தேதி கராச்சியில் லீக் ஆட்டங்கள் தொடங்குவதாகவும் அரைஇறுதி மற்றும் இறுதிப் போட்டி லாஹூரில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சில ஆட்டங்கள் ராவல்பிண்டியில் நடத்தவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் மோது போட்டி மார்ச் 1ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஆசிய கோப்பையை பாகிஸ்தான் தலைமையேற்று நடத்தியது. அப்போதும் இதேபோன்று பிசிசிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டன. இதையடுத்து இந்திய விளையாடும் ஆட்டங்கள் ஹைபிரிட் மாடலில் இலங்கையில் நடத்தப்பட்டன. அதேபோல் இந்த முறையும் விலக்கு பெற பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனினும் போட்டியை நடத்தும் ஐசிசியே இறுதி முடிவு எடுக்கும் என்பதால் முடிவு விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மாநிலங்களவையில் பெரும்பான்மை இழந்த பாஜக! அதிமுகவின் ஆதரவை நாடுமா? - BJP loss majority in rajya sabha