பெங்களூரு: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.
இப்போட்டிகள் நடைபெறும் தேதிகள் மற்றும் இடங்கள் குறித்த அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. இதில் 3 ஒருநாள் போட்டிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஜுன் 16,19 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் ஜுன் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 48 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு டி20 போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. இப்போட்டிகளும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஜூலை 5, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.
இத்தொடர் இரு அணிகளுக்குமே அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு தயாராக உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
இத்தொடருக்கு தயாராகும் வகையில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி, போர்டு ப்ரசிடண்ட் லெவன் அணியுடன் ஜுன் 13 அன்று சின்னசாமி மைதானத்தில் பயிற்சி ஆட்டம் விளையாட உள்ளது. இந்திய அணியை பொருத்தவரை இதற்கு முன் ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையில் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர்: மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை இரண்டு போட்டிகளில் மோதியிருக்கின்றன. இந்த இரு போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: லக்னோவை 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி..சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல பிரகாச வாய்ப்பு! - IPL 2024