ஐதராபாத்: வங்கதேசம் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து, இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி நாளை (அக்.9) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடருடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முக்கிய வீரர் ஒருவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் மஹ்முதுல்லா தான் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருடன் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியின் கேப்டனாக மஹ்முதுல்லா நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து அந்த சீசனில் வங்கதேச அணி தோல்வியை தழுவியதை அடுத்து அடுத்த ஆண்டு (2022) ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் நீண்ட நாட்கள் கழித்து மஹ்முதுல்லா, கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை வங்கதேச அணியில் இடம் பிடித்தார்.
20 ஓவர் உலக கோப்பையுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து மஹ்முதுல்லா ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட போதும், தற்போதைய இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் அவருக்கு வங்கதேச அணியில் இடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய தொடர் தான் மஹ்முதுல்லாவின் கடைசி டி20 கிரிக்கெட் என வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் பார்மட்டில் இருந்து ஓய்வு பெற மஹ்முதுல்லா திட்டமிட்டுள்ளார், இந்திய சீரிசுடன் அவர் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறினார். முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மஹ்முதுல்லா ஓய்வு பெற்றார்.
வங்கதேச அணிக்காக மொத்தம் 139 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள மஹ்முதுல்லா அதில் 2 ஆயிரத்து 395 ரன்களும், 40 விக்கெட்டுகளும் கைப்பற்றி உள்ளார். 20 ஓவர் பார்மட்டில் இருந்து மஹ்முதுல்லா ஓய்வு பெறும் நிலையில் அது வங்கதேச அணிக்கு பின்னடைவாக அமையும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா எப்போது ஓய்வு?: அடித்து சொல்லும் சிறுவயது பயிற்சியாளர்!