பெனோனி : 19வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
இதில் பெனோனி நகரில் இன்று (பிப். 11) நடைபெற்ற இறுதி போட்டியில், ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஹர்ஜாஸ் சிங் 55 ரன், கேப்டன் ஹக் வெப்ஜென 48 ரன்களும், ஆலிவர் பீக் 46 ரன்களும் எடுத்து அணி நல்ல ஸ்கோரை எட்ட உறுதுணையாக இருந்தனர். இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டும், நமன் திவாரி 2 விக்கெட்டும், சவுமி பாண்டே மற்றும் முஷிர் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. இந்திய அணிக்கு தொடக்க முதலே பேரிடியாக அமைந்தது. தொடக்க வீரர் அர்ஷின் குல்கனி 3 ரன்களில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் இந்திய அணியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.
சிறிது நேரம் நீடித்த தொடக்க வீரர் ஆதர்ஷ் சிங் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய வீரர்கள் களமிறங்குவதும், விரைவாக அவுட்டாகி வெளியேறுவதுமாக விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். இறுதி கட்டத்தில் முருகன் அபிஷேக் மட்டும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல போராடினார்.
இருப்பினும் முருகன் அபிஷேக் தன் பங்கிற்கு 42 ரன்கள் எடுத்து கொடுத்து ஏமாற்றம் அளித்தார். இறுதியாக 43 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 79 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 4வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.
முன்னதாக கடந்த ஆண்டும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு இந்திய அணி உலக கோப்பையை கோட்டை விட்டது. தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் இந்தியா தோல்வியை தழுவியது.
இதையும் படிங்க : U19 உலகக் கோப்பை: இந்தியாவின் வெற்றிக்கு 254 ரன்கள் இலக்கு! 6-வது முறை கோப்பை வெல்லுமா இந்தியா?