சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 2024 தொடரில் நேற்று (செப்.8) சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான கோவா சாலஞ்சர்ஸ் அணி, டெல்லி அணியை எதிர்த்து விளையாடியது. இதில் கோவா அணி 8-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த முதல் அணி என்ற சாதனையை படைத்தது கோவா சாலஞ்சர்ஸ் அணி. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ஹர்மீத் தேசாய், டெல்லி அணியின் சத்தியன் ஞானசேகரனுடன் மோதினார்.
இதில் ஹர்மீத் தேசாய் 6-க்கு 11, 11-க்கு 9, 11-க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அத்லீடு கோவா அணியின் யாங்சி லியு, டெல்லி அணியின் ஓரவன் பரனாங்குடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் யாங்சி லியு 11-க்கு 2, 11-க்கு 10, 11-க்கு 9 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ஹர்மீத் தேசாய், யாங்சி லியு ஜோடி, டெல்லி அணியின் சத்தியன் ஞானசேகரன், ஓரவன் பரனாங் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ஹர்மீத் தேசாய், யாங்சி லியு ஜோடி 9-க்கு 11, 11-க்கு 8, 11-க்கு 9 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
4வதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கோவா சாலஞ்சர்ஸ் அணியின் மிஹாய் போபோகிக்கா, டெல்லி அணியின் ஆன்ட்ரியாஸ் லெவன்கோவுடன் மோதினார். இதில் முதல் செட்டை மிஹாய் போபோகிக்கா 11-க்கு 7 என கைப்பற்றினார். இதனால் கோவா சாலஞ்சர்ஸ் அணி ஒட்டுமொத்தமாக 8-க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் சாம்பியன் பட்டத்தையும் கோவா சேலஞ்சர்ஸ் அணி தக்கவைத்தது. அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் எந்த அணி முதலில் 8 புள்ளியை எட்டுகிறதோ அந்த அணியே வெற்றியாளராக தீர்மானிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இறுதிப் போட்டியில் கோவா அணி 4வது ஆட்டத்தின் முதல் செட்டிலேயே 8வது புள்ளியை எட்டியதால் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் எஞ்சிய 2 செட்களும், கடைசியாக நடைபெற உள்ள மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டமும் நடத்தப்படவில்லை.
சாம்பியன் பட்டம் வென்ற அத்லீடு கோவா அணிக்கு பதக்கங்களை நீரஜ் பஜாஜ் அணிவித்தார். 2வது இடம் பிடித்த டெல்லி அணிக்கு கமலேஷ் மேத்தா பதக்கங்கள் வழங்கினார். மேலும் அந்த அணிக்கு ரூ.40 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையை நீரவ் பஜாஜ் வழங்கினார். தொடர்ந்து வெற்றியாளரான கோவா சாலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.60 லட்சத்துக்கான காசோலையை விடா தானி வழங்கினார்.
மேலும் சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணிக்கு வெற்றிக் கோப்பையை நீரஜ் பஜாஜ், திருமதி விடா தானி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட்டெட்டை சேர்ந்த சந்தீப் சர்மா ஆகியோர் கூட்டாக வழங்கினர். அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
அதில், இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரருக்கான விருதை ஹர்மீத் தேசாய் பெற்றார். இந்த விருதை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட்டெட்டைச் சேர்ந்த எம்.அண்ணாதுரை வழங்கினார். இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வெளிநாட்டு வீரருக்கான விருதை யாங்சி லியு தட்டிச் சென்றார். இதை காஸ்கோ நிறுவனத்தைச் சேர்ந்த நீரஜ் ஜெயின் வழங்கினார்.
இதையும் படிங்க: கிரிக்கெட்டுக்கு தடை.. மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்! என்னக் காரணம்? - Cricket Ban