மியாமி: உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற தொடர் என்றால் அது அமெரிக்காவில் நடைபெறும் கோபா (Copa America) கால்பந்து தொடர் தான். இந்த தொடரானது 1916ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
ALTA EN EL CIELO 🏆 pic.twitter.com/vjZaBc1ssB
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 15, 2024
இந்நிலையில், நடப்பு தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட பதிவு செய்யவில்லை.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் அடித்துவிட வேண்டும் என கடுமையான முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் இரு அணிகளின் முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இதற்கிடையில், போட்டியின் 2வது பாதியில் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி காயம் காரணமாக வெளியேறினார்.
16வது முறையாக சாம்பியன்: அவருக்கு மாற்று வீரராக லாடரோ மர்டினெஸ் களமிறங்கினர். இருப்பினும், இறுதிப் போட்டியில் வழங்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதையடுத்து, கூடுதலாக30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது.
Son lágrimas de líder, Leo 🫶 pic.twitter.com/5XUSSYUVXg
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 15, 2024
இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திய அர்ஜெண்டினா வீரர் மார்டின்ஸ், போட்டியின் 112வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து, கொலம்பியா அணி இறுதி நிமிடம் வரை கோல் அடிக்க போராடியது. ஆனால் கோல் ஏதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் கோபா கால்பந்து தொடரை 16வது முறையாக கைப்பற்றி அசத்தியது அர்ஜெண்டினா.
3 ஆண்டுகளில் 4 கோப்பை: இந்த தொடரில் கோப்பையை வென்றதன் மூலம் அதிக முறை அமெரிக்க கோபா கால்பந்து தொடரை வென்ற அணி என்ற உருகுவே (15 முறை) அணியின் சாதனையை தகர்த்தது அர்ஜெண்டினா (16 முறை).
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கடந்த 3 ஆண்டுகளில் 4 முக்கிய கோப்பைகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. அந்த வகையில், கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்கா கோப்பையை வென்றது. அதனைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ‘ஃபைனலிசிமா’ கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இத்தாலியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
அதே ஆண்டு உலகின் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலகக் கோப்பையை தன்வசப்படுத்தியது அர்ஜெண்டினா அணி. இது மெஸ்ஸியின் கால்பந்து பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: யூரோ கால்பந்து; இங்கிலாந்தை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்!