டெல்லி: ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரில், ஓபன் மற்றும் பெண்கள் பிரிவு என இரண்டிலும் இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 97 வருட செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இரண்டு பிரிவுகளிலும் இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில், இந்திய அணி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்திற்கு நேரில் அழைத்துப் பாராட்டினார். மேலும் வீரர்களுடன் கலந்துரையாடினார்.
முன்னதாக, இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி மற்றும் அணியின் தலைவர் ஸ்ரீநாத் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். இந்நிலையில், அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (AICF) சார்பில் நேற்று வீரர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
இதையும் படிங்க: பதக்கங்களுடன் முதலமைச்சரிடம் வாழ்த்து பாராலிம்பிக் வீரர்கள்.. ரூ.5 கோடி காசோலையை வழங்கி பாராட்டு!
பரிசுத் தொகை: அப்போது வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணிக்கு, ரூ.3.2 கோடி வெகுமதியாக வழங்கப்படும் என்று ஏ.ஐ.சி.எஃப் தலைவர் நிதின் நரங் தெரிவித்தார். அதன்படி, வெற்றி பெற்ற அணிகளிலிருந்து ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.25 லட்சமும், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் பயிற்சியாளர்களான அபிஜீத் குண்டே மற்றும் ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியக் குழுவின் தலைவரான கிராண்ட்மாஸ்டர் திபியேந்து பருவா ரூ.10 லட்சமும், உதவிப் பயிற்சியாளர்களுக்கு ரூ.7.5 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவின் போது ஏ.ஐ.சி.எஃப் தலைவர் நிதின் நரங் பேசுகையில், "தங்கத்திற்கான ஆசை ஹங்கேரியில் முடிந்தது. ஆனால், வெற்றிக்கான தேடல் என்பது இன்னும் தொடர்கிறது. ஓபன் பிரிவில் நாம் ஆதிக்கம் செலுத்தினோம், பெண்கள் பிரிவிலும் நாம் அதையேச் செய்தோம்" என தெரிவித்தார்.
தொடர்ந்து ஏஐசிஎஃப் பொதுச் செயலாளர் தேவ் படேல் பேசுகையில், “விஸ்வநாதன் ஆனந்த் போட்ட விதைகள் தற்போது காடாக வளர்ந்துள்ளனர். நமது வீரர்கள் ஒவ்வொருவரும் சதுரங்கப் பலகையின் ஷார்ப் ஷூட்டர்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இரட்டை தங்கப் பதக்கம் நாட்டில் செஸ் புரட்சியை ஏற்படுத்த உதவும். 97 வருட செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 2 பிரிவுகளிலும் தங்கம் வென்றுள்ளோம். இது ஒரு வரலாற்றுச் சாதனை. அடுத்த தலைமுறை செஸ் வீரர்களுக்கு இந்த உத்வேகத்தை எடுத்துச் செல்வோம்” என தெரிவித்தார்.