ஐதராபாத்: நவம்பர் மாதம் 2025 ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், அடுத்த சீசனுக்கான விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகம் நேற்று (செப்.28) வெளியிட்டது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து 2025-27 ஐபிஎல் சீசன்களுக்கான விதிமுறைகள் பட்டியலை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டார்.
எதிர்பார்த்தது போல் 2025 ஐபில் சீசனில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதில் ரைட் டூ மேட்ச் (ஆர்டிஎம்) விதியின் மூலம் 1 வீரர் உள்பட 6 வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொள்ளலாம். ரைட் டூ மேட்ச் (ஆர்டிஎம்) என்பது ஒரு வீரர் கடந்த 5 ஆண்டுகளாக தேசிய அணிக்காக விளையாடத நிலையில், அவர் அன்கேப்டு வீரராக தக்கவைத்துக் கொள்ள முடியும்.
அதன்படி அவர்து ஊதிய முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், 2025 ஐபிஎல் சீசனில் அணிகள் அன்கேப்டு முறையில் தக்கவைக்க நினைக்கும் வீரர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.
எம்எஸ் தோனி:
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் எம்.எஸ் தோனி. சென்னை அணிக்காக 5 முறை கோப்பை வென்று தந்து வெற்றிகரமான கேப்டனாக தோனி விளங்குகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனி, அணியில் தான் களமிறங்கும் இடத்தையும் மாற்றிக் கொண்டார்.
கால் மூட்டு காயம் காரணமாக அதிக நேரம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதை தோனி தவிர்த்து வந்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவுகிறது. அதேநேரம் அவர் விளையாடும் பட்சத்தில் அவரை அன்கேப்டு வீரராக தக்கவைக்க சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.
மொகித் சர்மா:
வேகப்பந்து வீச்சாளர் மொகித் சர்மா சென்னை உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி உள்ளார். தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் மொகித் சர்மா டெத் ஓவர்களை திறம் பட வீசி அதில் அணிக்கு வெற்றியை தேடித் தரும் வீரராக காணப்படுகிறார்.
அரியானாவை சேர்ந்த மொகித் சர்மா கடைசியாக 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். இந்நிலையில், நடப்பு சீசனில் அவர் அன்கேப்டு பிளேயராக தக்கவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தீப் சர்மா:
வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரும் கடைசியாக 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அதன் பின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி விளையாடி வருகிறார். அதனால் அவரும் அன்கேப்டு பிளேயராக ராஜஸ்தான் அணியால் தக்கவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பியூஷ் சாவ்லா:
இரண்டு முறை உலக கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்தவரான பியூஷ் சாவ்லா கடந்த இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். 35 வயதான பியூஷ் சாவ்லா கடைசியாக 2012ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். மும்பை அணி நிர்வாகம் விரும்பும் நிலையில், அவரும் அன்கேப்டு வீரராக தக்கவைக்கப்படலாம்.
விஜய் சங்கர்:
தமிழக வீரரான விஜய் சங்கர் இந்திய அணியில் இடம் பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார். முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து ஜொலித்து வரும் விஜய் சங்கருக்கு தேசிய அணியில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. 33 வயதான விஜய் சங்கர் கடைசியாக 2019ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். தற்போது அவரும் அன்கேப்டு வீரராக தக்கவைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த இலங்கை! இந்தியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவுக்கு ஆப்பா? - Sri Lanka vs New Zealand 2nd Test