சென்னை: 95வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி நேற்றைய முன்தினம் தொடங்கியது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்தப் போட்டியானது செப்டம்பர் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் 10 அணிகள் பங்கேற்கிறது. இதன் முதன் நாளான நேற்றைய முன்தினம் இரண்டு போட்டிகள் நடைபெற்றது.
தொடக்க ஆட்டத்தில் ஒடிசா மற்றும் மத்திய செயலகம் ஹாக்கி சங்கம் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. போட்டி தொடங்கிய 8வது நிமிடத்தில் பிரசாத் குஜூர் அடித்த பீல்டு கோல் மூலம் ஒடிசா அணி முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஒடிசா அணி முன்னிலை வகித்தது.
அதேநேரம், மத்திய செயலக அணியின் கார்த்தி செல்வம் 32வது நிமிடத்தில் பீல்ட் கோல் அடித்ததன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற நிலையில் சமமாக இருந்தனர். பரபரப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில், ஒடிசா அணியின் சுதீப் மின்ஸ் 43வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடிக்க, ஒடிஷா மீண்டும் முன்னிலை பெற்றது.
இதையும் படிங்க: ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டித் தூக்கிய இந்திய ஹாக்கி அணி! - ஐந்தாவது முறை சாம்பியனாகி அசத்தல்
பின்னர், ஒடிசா ஹாக்கி அணி வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில், அதனை தடுக்கும் வகையில் மத்திய செயலக அணியின் கார்த்தி செல்வம் 58வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். அதனைத் தொடர்ந்து பிரிவு A ஆட்டத்தில் பாரத் பெட்ரோலியம் அணி, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.
இதன் போட்டி தொடங்கிய 38வது நிமிடத்தில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணியின் வீரர் விஸ்வாஸ் கிரிஷ் தன் அணிக்கு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் சுதாரித்து ஆடிய பாரத் பெட்ரோலிம் அணி கோல் அடிக்கும் முனைப்பில் போட்டியை எடுத்துச் சென்றது.
பின்னர், BPCL அணியின் பி.பி.சோமன்னா 52வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆட்டம் சமனானது. 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சென்று கொண்டிருக்க, தேஜஸ் சவான் 54வது நிமிடத்தில் கோல் அடித்து தன் அணியை வெற்றி பெறச் செய்தார். ஆட்டத்தின் இறுதியில் பாரத் பெட்ரோலியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணியை வென்றது.