பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 17வது பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஒரே நாளில் இந்தியா 8 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா புது மைல்கல் படைக்க உதவிய வீரர், வீராங்கனைகள் குறித்து காணலாம்.
யோகேஷ் கதுனினா (தடகளம்)- வெள்ளி:
ஆடவர் வட்டு எறிலில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கான முதல் பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். ஆண்களுக்கான F56 பிரிவில் வட்டு எறிதல் வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். யோகேஷ் கதுனியா 42.22 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரிலும் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிதேஷ் குமார் (பேட்மிண்டன்)- தங்கம்:
ஆடவர் பேட்மிண்டன் SL3 பிரிவின் இறுதிப் போட்டியில் கிரேட்டன் பிரிட்டனை சேர்ந்த டேனியல் பெத்தல் என்பவரை எதிர்கொண்ட நிதேஷ் குமார், அதில் 21-க்கு 14, 18-க்கு 21, 23-க்கு 21 என்ற செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கம் வென்றார். ஏறத்தாழ 80 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் நிதேஷ் குமார் போராடி வென்றார். இதற்கு முன் ஏறத்தாழ 9 முறை டேனியல் பெத்தலுடன் நேருக்கு நேர் மோதி, ஒன்றில் கூட வெற்றி பெறாத நிதேஷ் குமார், நேற்று அதையும் தகர்த்து புது மைல்கல் படைத்தார்.
துளசிமதி முருகேசன் (பேட்மிண்டன்)- வெள்ளி:
பெண்களுக்கான SU5 ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன், நடப்பு உலக சாம்பியன் மற்றும் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் சாம்பியன் Yang Qiu Xiav-விடம் தோல்வியை தழுவினார். இருப்பினும், கடந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் விளையாட்டில் 4 பதக்கங்கள் ஆடவர் பிரிவில் இருந்து மட்டுமே கிடைத்த நிலையில், தற்போது அந்த சாதனையை முறியடித்து பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற மைல்கல்லை துளசிமதி முருகேசன் படைத்தார்.
மணிஷா ராமதாஸ் (பேட்மிண்டன்)- வெண்கலம்:
தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் வெற்றிக்கு பின்னர் சில நிமிடங்களில் அதே மகளிர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்தது. 19 வயதான தமிழக வீராங்கனை மணிஷா ராமதாஸ் அதே SU5 பிரிவில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். முன்னதாக அரைஇறுதியில் மற்றொரு தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசனிடம் தோல்வியை தழுவி வெணகலப் பதக்கத்திற்கான போட்டிக்கு மணிஷா ராமதாஸ் தேர்வானது குறிப்பிடத்தக்கது.
சுஹாஸ் யாதிராஜ் (பேட்மிண்டன்)- வெள்ளி:
பேட்மிண்டன் விளையாட்டில் இருந்து இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் சுஹாஸ் யாதிராஜ் மூலம் கிடைத்தது. ஆடவருக்கான SL4 பிரிவின் இறுதிப் போட்ட்யில் பிரான்ஸ் வீரர் லுகாஸ் மசூரிடம் தோல்வியை தழுவிய சுஹாஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். 29 வயதான சுஹாஸ் மாண்டி ஐஐடியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர். மேலும் விஹாஸ் யாதிராஜ் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரிலும் இதே பிரான்ஸ் வீரர் லுகாஸ் மசூரிடம் தோல்வியை தழுவி சுஹாஸ் வெள்ளி வென்றார். தற்போது பாரீஸ் பாராலிம்பிக்சிலும் சுஹாஸ் வெள்ளி வென்றுள்ளார். மேலும் அடுத்தடுத்த பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீரர் என்ற சிறப்பையும் சுஹாஸ் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகேஷ் குமார் - சீத்தல் தேவி (வில்வித்தை)- வெண்கலம்:
கலப்பு இரட்டையர் காம்பவுன்ட் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ராகேஷ் குமார் - சீத்தல் தேவி ஆகியோர் வெண்கலம் வென்றனர். பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் வில்வித்தையில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சுமித் அன்டில் (தடகளம்)- தங்கம்:
ஆடவர் F64 ஈட்டி எறிதலில் புதிய பாராலிம்பிக்ஸ் சாதனை படைத்தது மட்டுமின்றி இந்தியாவுக்கு தங்கம் பதக்கம் வென்று தந்திருக்கிறார் சுமித் அன்டில். பாரீஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா விட்டதை பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் சுமித் அன்டில் கைப்பற்றி நாட்டு பெருமை சேர்த்துள்ளார். 70.59 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த சுமித் அன்டில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் அதிக தூரம் ஈட்டி எறிந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
நித்ய ஸ்ரீ சுமதி சிவன் (பேட்மிண்டன்)- வெண்கலம்:
பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை பெற்று தந்த தமிழக வீராங்கனை நித்ய ஸ்ரீ சுமதி சிவன். SH6 பிரிவில் வெணகலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தோனேஷியா வீராங்கனையை எதிர்கொண்ட நித்ய ஸ்ரீ சுமதி சிவன் அதில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார். முன்னதாக 2022ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய பாரா சாம்பியன்ஷிப் போட்டியில் நித்ய ஸ்ரீ சுமதி சிவன் இரண்டு பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனைகள் பதக்க வேட்டை! - paralympic 2024