திருநெல்வேலி: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி, நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நாளில் கிருஷ்ணர், பெருமாள் உள்ளிட்ட வைணவ தலங்களுக்குச் சென்று பக்தர்கள் வழிபாடு செய்வார்கள். அதேபோல், கிருஷ்ண ஜெயந்தி அன்று பெரும்பாலான மக்கள் வீட்டில் வைத்தே சிறப்பு வழிபாடு நடத்துவது உண்டு.
குறிப்பாக, அன்றைய தினம் குழந்தைகளின் கால் பாதத்தில் அரிசி மாவை வைத்து அவர்களை வீட்டில் நடக்க வைப்பார்கள். அதாவது, குழந்தைகளின் பாதம் வீட்டின் தரையில் பதிவதன் மூலம் கிருஷ்ணரே தங்கள் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். இந்த நிலையில், கிருஷ்ண ஜெயந்தி ஏன் கொண்டாடுகிறோம், அன்றைய தினம் எவ்வாறு வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த ஜோதிடர் சங்கட சுப்பிரமணியன் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "பொதுவாக கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி என்று அழைப்பதுண்டு. கிருஷ்ணர் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தார், அன்றைய தினம் ரோகிணி நட்சத்திரம். எனவே தேய்பிறை அஷ்டமியும், ரோகிணியும் கூடிவரும் தினத்தில் கிருஷ்ணர் அவதரித்ததால் அன்று கோகுலாஷ்டமி என்று அழைப்பதுண்டு.
பொதுவாக வைணவர்கள் பெருமாள் கோயில்களில் ஸ்ரீ ஜெயந்தி தான் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு நாளை (ஆகஸ்ட் 26) கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. நாளை மறுதினம் ஸ்ரீ ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இந்து மத சாஸ்திரத்தில் எதைச் செய்தாலும் கடைசியாக கிருஷ்ணாவுக்கு தான் போய்ச் சேரும். காரணம், எந்த மந்திரங்கள் ஓதினாலும் கடைசியாக கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லித் தான் முடிப்பார்கள். அந்த அளவிற்கு கிருஷ்ணர் சிறப்பு பெற்றவர் என்றார்.
வழிபாடு: கிருஷ்ணர் வழிபாட்டைப் பொறுத்தவரை மிக மிக எளிமையானது. கிருஷ்ணர் தனக்கு ஒரு துளி நீர் போதும் என்று பகவத் கீதையில் கூறுகிறார். அதாவது, ஒரு துளி நீரை விட்டு கிருஷ்ணா என்று வணங்கினாலே போதும், அதேபோல் ஒரே ஒரு துளசி இலை இருந்தால் போதும் என்கிறார். எனவே, கிருஷ்ணன் வழிபாடு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டும் என்று இல்லை.
நைவேத்தியம்: கிருஷ்ணரைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும், அவருக்கு வெண்ணெய்தான் பிடித்தமான நைவேத்தியம் என்று. அதோடு அப்பம், முறுக்கு, நாவல் பழம் ஆகியவையும் படைக்கலாம் என தெரிவித்தார்.
பிரச்னைகள் தீரும்: கணவன் மனைவியிடையே பிரச்னை இருக்கும் நபர்கள் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு மேற்கொண்டால் நிச்சயம் பிரச்னைகள் தீரும். அதேபோல், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கிருஷ்ணர் மாதிரியே தனக்கு குழந்தை வேண்டும் என்று வழிபட்டால் அவர்களுக்கு கிருஷ்ணரே குழந்தையாகப் பிறப்பார் என்பது ஐதீகம்.
எப்போது வழிபடலாம்? பொதுவாக இரவில் தான் கிருஷ்ணர் அவதரித்தார் என்பதால், மாலைப் பொழுதிற்கு பிறகு வழிபாடு மேற்கொள்வது சிறந்தது என குறிப்பிட்டார்.
குழந்தைகளின் கால் பாதம் வீட்டில் வைப்பது ஏன்? இதில் சுவாரஸ்யமான பின்னணி ஒன்று இருக்கிறது. அதாவது, கிருஷ்ணர் அவதாரம் எடுத்து வந்த நோக்கம் முடிந்து விட்டது. மேலும், கிருஷ்ணருக்கு இறப்பே கிடையாது. இருந்தாலும், அவர் மனித உடலை எடுத்து விட்டதால் இறந்து ஆக வேண்டும் என்பது விதி.
எனவே, கிருஷ்ணர் ஒரு மலை மேல் படுத்து தனது இரண்டு பாதங்களையும் காட்டினார். அப்போது ஒருவரை அழைத்து, தன் இரு பாதங்களில் அம்பு எய்தும்படி கூறினார். அவரின் பாதத்தில் அம்புபட்ட மறு நொடியே அவர் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டதாக புரணங்கள் கூறுகின்றன என்ற அவர், இதைக் குறிக்கும் விதமாகவும் குழந்தைகள் பாதம் வீட்டில் வைக்கப்படுகிறது என்றார். அதாவது, இறந்து போன கிருஷ்ணர் மீண்டும் அவதரித்து அந்த பாதம் மூலம் தங்கள் வீட்டிற்கு வருவதாக ஐதீகம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பழனியில் 2ம் நாள் முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலம்.. அலைகடலென குவிந்துள்ள பக்தர்கள்!