தஞ்சாவூர்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர், திருவாரூரில் பிறந்து திருவையாறில் வாழ்ந்து, திருவையாறு காவிரிக்கரையில் 1847ஆம் ஆண்டில் முக்தி அடைந்தவர். அனைத்தும் ராமபிரானே என வாழ்ந்தவர் இவர், தற்போது இவர் இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள், கர்நாடக சங்கீத உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி, கர்நாடக இசைப் பிரியர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
எனவே கர்நாடக இசைப் பிரியர்களால் இவர் ஆராதிக்கப்பட்டார். இதன் பொருட்டு தியாகராஜரை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் திருவையாறில் அமைந்துள்ள அவரது சமாதி அருகே ஆராதனை விழா, தியாக பிரும்ம மகோத்சவ சபையால் தொடர்ந்து வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 177வது ஆராதனை விழா நேற்று (ஜன.26) சிறப்பாகத் தொடங்கியது.
மேலும் இந்த ஆராதனை விழாவில், நாடெங்குமிருந்து வந்திருந்த கர்நாடக இசைப்பிரியர்கள் மற்றும் பிரபல கர்நாடக வித்வான்கள் கலந்துகொண்டு இசைக் கச்சேரியை தினமும் நடத்துகின்றனர். இந்த ஆராதனை விழா வரும் 30ஆம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனையடுத்து ஆராதனை துவக்க விழா நிகழ்ச்சியில், சிட்டி யூனியன் வங்கி தலைவர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தியாக பிரம்ம மகோத்சபா தலைவர் ஜி.கே வாசன், தியாகராஜர் ஆராதனை விழாவின் உயரிய நோக்கமே, சபையின் மூலம் தியாகராஜ சுவாமியின் புகழையும், கர்நாடக இசையையும், உலகம் முழுவதும் பரப்புவது தான்" எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய காமகோடி, "கடவுள் ராமரை நான் பார்த்து விட்டேன் என்று கூறுவது தியாகபிரம்மம் தான். சாஸ்திர ரீதியாகவும் சரி, சங்கீதத்திலும் சரி, நம்முடைய கலை கலாச்சாரத்திலும் சரி, காவிரியின், டெல்டாவின், நம்முடைய தமிழ்நாட்டின் பாரத தேசத்தின் முக்கியமான சொத்து என்றால் அது மிகையாகாது" எனத் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் செயலாளர்கள் அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீ முஷ்ணம் ராஜாராவ், பொருளாளர் கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் காயத்ரி வெங்கட்ராகவன் பாட்டு , ஸ்ரீகாந்த் வயலின், மனோஜ் சிவா மிருதங்கம், ராஜ கணேஷ் கஞ்சிரா ஆகிய குழுவினரின் இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பிரபல கலைஞர்களின் வாய்பாட்டும், பிரபல நாதஸ்வர கலைஞர்களும், பிரபல வீணை, வயலின், புல்லாங்குழல் இசைக் கலைஞர்களும் தினமும் பங்கேற்று இசை நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.