அயோத்தி: உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமரின் சிலை இன்று (ஜன.22) பிராணப் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதையொட்டி, அந்த நகரம் முழுவதும் தோரணைகள், மாவிலைகள், காவி நிற கொடிகள் என விழாக்கோலம் பூண்டுள்ளது.
கும்பாபிஷேகம் நடக்கும் ராமர் கோயில் முழுவதும் அலங்கரிக்கும் பல்வேறு விதமான மலா்கள், சிறப்பு விளக்குகளால் ஜொலிக்கின்றன. நகரெங்கிலும் ராமா் தொடா்பான மிகப்பிரம்மாண்டமான கருத்துருவில் கண்கவா் பதாகைகள், அலங்கார வளைவுகள், வில் அம்பு வடிவங்கள் நிறுவப்பட்டுள்ளன.
உலகமே உற்றுநோக்கும் இந்த அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அப்பகுதிகள் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுமார் 10,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு அப்பகுதி முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் இருந்து 14 தம்பதிகள்: இதற்கிடையே, இந்த ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, தமிழகத்தைச் சோ்ந்த ஆடலரசன் தம்பதி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 14 தம்பதிகள், பிரதிஷ்டை விழா தொடா்பான சடங்குகளை முன்னின்று நடத்தவுள்ளனா்.
இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு நாளை ஜன.23ஆம் தேதி முதல் தரிசனம் செய்வதற்கு கோயிலில் அனுமதி கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தா்களுக்கு உணவு வழங்கும் வகையில் இஸ்கான் (ISKCON) உள்ளிட்ட ஆன்மிக அமைப்புகள் மற்றும் பல்வேறு கோயில்களின் அறக்கட்டளைகள் சாா்பில் அன்னதானக் கூடங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.