புதுக்கோட்டை: மணமேல்குடி, மாந்தாங்குடி கிராமத்தில் அக்னி காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. திருமண வரன், குழந்தை வரன், சுமங்கலி பாக்கியம் வேண்டி பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வருகை வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். இந்த கோயிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அருள்வாக்கு கூறும் நிகழ்வு நடைபெறும்.
இதன் ஒரு பகுதியாக வருடந்தோறும் தை மாதம், எரியும் நெருப்புக் கட்டையை விழுங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில், வெள்ளிக்கிழமை தை அமாவாசை என்பதால், அக்னி காளியம்மனுக்கு திரவியம், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, பூசாரி மாரிமுத்து காளி வேடமணிந்து, சூலாயுதம் தாங்கி, கையில் தீ சட்டி சுமந்து சாமியாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். அப்போது எரியும் நெருப்புக் கட்டையை எடுத்து வாயில் கடித்தும், அக்னி கிழங்கை விழுங்கியும் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தினார். தொடர்ந்து நெருப்பு கட்டையைத் தனது இரு கால்களிலும் தேய்த்துக் கொண்டு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
இதனையடுத்து, திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. எரியும் நெருப்புக் கட்டையை விழுங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற இத்திருவிழாவில், புதுக்கோட்டை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: ரயில் மோதி யானைகள் உயிரிழப்பைத் தடுக்க ஏஐ கண்காணிப்பு அமைப்பு தொடக்கம்!