ஹைதராபாத்: 2014 மற்றும் 2019 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது பாரதிய ஜனதா கட்சி. இத்தேர்தல்களில் 282 மற்றும் 303 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. ஆனால் 2024ம் ஆண்டு தேர்தல் முந்தைய தேர்தல்களைப் போன்று முடிவுகளைக் கொடுக்கவில்லை. பாஜக தனியாக 240 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. கூட்டணியாக 292 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 32 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
பாஜக கூட்டணியில் 2வது பெரிய கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. இந்த கட்சி தனியாக போட்டியிட்டு 16 எம்.பி.க்களை வென்றுள்ளது. ஆந்திர மாநிலத்திலும் இக்கட்சி ஆட்சியமைக்கும் நிலையில் அம்மாநில முதலமைச்சராக பதவியேற்க தயாராகி வருகிறார் சந்திரபாபு நாயுடு. இது தவிர கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனசேனா கட்சிக்கு 2 எம்.பி.க்கள் உள்ளனர். இக்கட்சியின் தலைவரான பவன்கல்யாண் சந்திரபாபுவுக்கு முழு ஆதரவு அளிப்பார்.
கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக 3 தொகுதிகளில் வென்றிருந்த போதிலும் இந்த எம்.பி.க்கள் சந்திரபாபுவின் ஆதரவாளர்கள் தான் என கூறுகின்றனர் . எதிர்க்கட்சியான ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியிலும் 4 எம்.பி.க்கள் இருக்கும் நிலையில், இவர்களில் திருப்பதி, மற்றும் அரக்கு தொகுதி எம்.பி.க்களை வசப்படுத்தும் வேலைகள் ஏற்கெனவே துவங்கிவிட்டன. எனவே கிட்டத்தட்ட 22 எம்.பி.க்கள் சந்திரபாபு நாயுடு வசம் உள்ளனர். இது தவிர, தெலங்கானாவிலும் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற எம்.பி.க்கள் சிலர் சந்திரபாபுவின் செல்வாக்கின் கீழ் வர உள்ளனர்.
சந்திரபாபு நிலைப்பாடு என்ன?: சந்திரபாபு பிரதமராக நினைத்தால் தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் கட்சி கூட ஆதரவு அளிக்கலாம். ஆனால் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கொள்கையில் நிலையாக இருக்கிறார் சந்திரபாபு நாயுடு. தற்போது ஆந்திர அரசியலில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ள அவர், கூட்டணி தலைவர்களுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார். டெல்லி புறப்படும் முன்னதாக இன்று (ஜூன் 5) செய்தியாளர்களை சந்தித்த அவர் நான் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தொடர்கிறேன். என்பதை உறுதி செய்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியுடனான சந்திரபாபு நாயுடுவின் உறவு 1998ம் ஆண்டு முதலே தொடர்கிறது. வாய்பாய் தலைமையிலான முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த சந்திரபாபு நாயுடு, ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கான கோரிக்கைகளை கேட்டுப்பெறுவதில் வெற்றி பெற்றிருந்தார். சர்வதேச விமான நிலையம், நெடுஞ்சாலைகள் என மாநிலம் வளர்ச்சியும் பெற்றது. மோடி தலைமையிலான முதல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் அங்கம் வகித்த சந்திரபாபு நாயுடு, அரசுக்கு எதிராக 2018ம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்தார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்ததற்காக இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதே போன்று 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது தெலுங்கு தேசம் கட்சி அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதோடு, நிவாரணப் பொருட்களையும் குஜராத்துக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத் தக்கது.
தற்போதை சூழலில் தேர்தலுக்கு முன்பாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற சந்திரபாபுவுக்கு பாஜகவை ஆதரிப்பதில் சிக்கல் இல்லை என்றாலும், கோரிக்கைகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தரப்பிலும் சந்திரபாபு நாயுடுவுக்கு தூது இல்லாமல் இல்லை. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து என மன்மோகன் சிங் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற பாஜக அரசு தவிவிரவிட்டதை சுட்டிக்காட்டியுள்ளதோடு, இதனை கூட்டணிக்கான நிபந்தனையாக சந்திரபாபு நாயுடு முன்வைப்பாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதிஷ்குமார் நிலைப்பாடு என்ன?: மறுபுறம் எப்போதுமே குழப்பத்தில் கிலி ஏற்படுத்தும் நிதிஷ் தற்போதும் அதே பாணியை பின்பற்றி வருகிறார். பீகார் மாநில பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரியை சந்திக்க மறுத்துள்ளார் நிதிஷ்குமார். இன்று டெல்லி செல்லும் விமானத்தில் நிதிஷ்குமாரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் அடுத்தடுத்த இருக்கைகளில் பயணம் செய்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. துணை பிரதமராக்குகிறோம் என கூறி இந்தியா கூட்டணி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக அல்லாத கட்சிகளிடம் பேச மல்லிகார்ஜன கார்கே மற்றும் கே.சி.வேணுகோபாலுக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல கட்சிகள் அடங்கிய வானவில் கூட்டணியை உருவாக்கும் முயற்சியை இவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
டெல்லியில் இன்று ஆலோசனை: நிதிஷ்குமார் 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட போது, முதன் முதலாக எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியைவிட்டு வெளியேறியவர் நிதிஷ்குமார் தான். பீகாரில் வேடிக்கையாக கூட்டணிகள் மாறலாம் ஆனால் நிதிஷ் தான் முதலமைச்சர் என்று கூட சொல்வார்கள், 17 ஆண்டுகளாக பீகார் முதலமைச்சராக இருக்கிறார் நிதிஷ்குமார், தேசிய ஜனநாயக கூட்டணி , மகா கட்பந்தன் என கூட்டணிகளை கடந்த சில வருடங்களிலேயே மாற்றியவர். தற்போதும் பாஜகவுக்க உரிய பதில் கொடுக்காமல் போக்கு காட்டி வருகிறார். இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி என அனைவரும் டெல்லியில் ஆலோசிக்கும் நிலையில் உறுதியான முடிவு இன்று மாலைக்குள் தெரிய வரும்.
இதையும் படிங்க: அதிமுக, பாஜகவை பின்னுக்கு தள்ளிய நாம் தமிழர்.. தொகுதி வாரியாக வாக்கு விபரம்.. மாநில கட்சி அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு!