ஹைதராபாத்: இந்தியா மிகப்பெரிய நகரமயமாதலை எதிர்கொண்டுள்ளது. இத்தகைய சூழலில், நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்க அதிகளவிலான முதலீடுகள் தேவைப்படுகின்றன. தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அண்மையில் தாக்கல் செய்த தனது முதல் மத்திய பட்ஜெட்டில் (2024 -25), வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு 82576.57 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இது 2023-24 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 69270.72 கோடியைவிட கிட்டத்தட்ட 19 சதவீதம் அதிகமாகும். நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் தனியார் பங்களிப்பை இந்த பட்ஜெட் ஊக்குவிக்கிறது. அதன்படி கொள்கைகள், வங்கித் திட்டங்கள் மற்றும் சந்தை அடிப்படையிலான வழிமுறைகளை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்க பட்ஜெட் முன்மொழிகிறது.. 2023-24 பொருளாதார ஆய்வறிக்கையின் அடிப்படையில் இந்த முன்மொழிவுகள் அமைந்துள்ளன.
நகராட்சிகளின் குறைந்த வருவாய்: இருப்பினும், நகர்ப்புற நிர்வாகத்தின் பலவீனமான நிதி வருவாய் ஒரு தீவிரமான பிரச்னையாகவே உள்ளது. இந்தியாவில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் மொத்த வருவாயில் நகராட்சிகளின் வருவாய் 2.6 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது மெக்ஸிகோவின் 4.2 சதவிகிதம் மற்றும் டென்மார்க்கின் 27.2 சதவிகிதம் என்ற விகிதத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. மேலும், சிறிய நகரங்களில் மோசமான நிதிப் பிரச்சனை உள்ளது.
இந்தியாவில் நகராட்சிகளின் நிதி இரண்டு அடிப்படை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, நகரங்களுக்கு அவற்றின் கட்டாயப் பொறுப்புகளுக்கு ஏற்றவாறு ‘சொந்த’ வரி வருவாய்க்கான வழிமுறைகள் இல்லை. 74வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நகராட்சிகளின் செயல்பாட்டுக் களத்தை நிர்ணயிக்கிறது ஆனால் அவற்றுக்கான வருவாய் ஈட்டும் ஆதாரங்களை அது தெளிவாகக் குறிப்பிடவில்லை. நகராட்சிகள் வசூலிக்கக்கூடிய வரிகள் மற்றும் கட்டணங்களை மாநில அரசுகள் நிர்ணயிக்கின்றன. இரண்டாவதாக, கிடைக்கும் வரி ஆதாரங்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. எனவே, நகராட்சிகளின் 'செயல் திட்டங்களுக்கும், வருவாய் நிதிக்கும் இடையே பெரிய முரண் உள்ளது.ட
துல்லியமான தரவுகள் இல்லை: சொத்து வரி (PT) என்பது இந்தியாவின் மிக முக்கியமான நகர்ப்புற உள்ளாட்சி வரியாகும். ஜிஎஸ்டிக்கு பிந்தைய காலத்தில் அதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இருப்பினும், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் அங்கம் வகிக்கும் (OECD) நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவிகிதமாகவும், கனடா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் 3 முதல் 4 சதவீதமாகவும் உள்ள சொத்து வரி வசூல் அளவை ஒப்பிடும்போது, இந்தியாவில் இந்த வரியின் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.15% ஆக மட்டுமே உள்ளது.
சொத்து வரியானது, அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் மாநிலப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசுகள் வரி அடிப்படைகள், மதிப்பீட்டிற்கான நடைமுறை, தள்ளுபடி மற்றும் விலக்கு கொள்கைகள், வரிவிகித நிர்ணயம், வரி ஏய்ப்புகளை கையாள்வதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுக்கான வழிமுறைகளை வகுத்துள்ளன. இது சொத்து வரி வசூல் நடைமுறையை திறம்பட கையாள செய்கிறது.
இருப்பினும் குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களை தவிர, பிறவற்றில் சொத்துகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் கணக்கீடுவதற்கான முறையான வழிமுறைகள் இல்லை. அத்துடன், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட பகுதிகளில் உள்ள சொத்துகளின் எண்ணிக்கை, அவற்றின் உண்மையான சந்தை மதிப்பீடு உள்ளிட்டவை குறித்த துல்லியமான தரவுகள் இல்லாதது, சொத்து வரி நிலுவைகளுக்கு தீர்வு காண்பதற்கான முறையான வழிமுறைகள் இல்லாதது உள்ளிட்டவை சொத்து வரி வருவாயின் வீரியத்தை குறைத்துவிடுகின்றன.
ஜிஎஸ்டியால் பாதிப்பு: பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகள் வளர்ந்துவரும் போதிலும் மோட்டார் வாகன வரி மற்றும் விளம்பர வரி ஆகியவற்றை நகரங்களால் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதன்கீழ் பல வரிகள் (உதாரணம்: கேளிக்கை வரி, ஆக்ட்ராய், உள்ளாட்சி அமைப்பு வரி) கொண்டு வரப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா குஜராத்தில் உள்ள நகரங்களுக்கு உள்ளாட்சி வரி மற்றும் ஆக்ட்ராய் முக்கிய வருவாய் ஆதாரங்களாக இருந்தன. இந்த வரிகள் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்பட்ட பின், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது ஜிஎஸ்டி வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்ற நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு முற்றிலும் முரணானது.
இந்திய நகரங்களில் உள்ள நீர் மற்றும் கழிவுநீர் சேவைக்கான வரி வருவாய், சராசரியாக அவற்றின் செயல்பாட்டுக்கான செலவில் 55% ஆக மட்டுமே உள்ளது. இது பிரேசில், மெக்சிகோ தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் போன்ற நாடுகளின் விகிதங்களை விடக் குறைவு. மேலும் சில இந்திய நகரங்கள் சொத்து வரி மதிப்பீடு, வரி விலக்கு போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இவ்வாறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை பெருக்குவதற்கான மாதிரி செயல் திட்டங்கள் இல்லாததால், இந்த பட்ஜெட்டில் திட்டமிட்டப்படி, நகர்ப்புற சேவைகளுக்கான நிதி ஆதாரத் திட்டங்களை தயாரிப்பதற்கான நோக்கம் நிறைவேறாமல் போகக்கூடும்.
முதலில் செய்ய வேண்டியது என்ன?: எனவே, இந்தியாவில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆதாரங்களை வலுப்படுத்துவது ஒரு தேர்வாக இல்லாமல் அவசியமான விஷயமாகும். சொத்து வரி மதிப்பீட்டை எளிமையாக்குதல், புதிய வரி செலுத்தும் முறைகளை அறிமுகப்படுத்துவது, சொத்து வரி வசூல் நடைமுறையை முற்றிலும் டிஜிட்டல்மயமாக்குவது உள்ளிட்ட சீர்திருத்தங்களால் சொத்து வரி வசூலை அதிகரிக்க செய்து. நகர்ப்புற உள்ளாட்சிகளின் வருவாயை உயர்த்தலாம். குறிப்பாக, சொத்து வரி விகிதத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கே வழங்கப்பட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் அனைத்து அடிப்படை சேவைகளும் வரவு -செலவுகளின் அடிப்படையில் அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதிகளில் பெரும்பங்கை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயில் இருந்தே பெற வழிபிறக்கும். குடிமக்களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மேலும் சிறந்த சேவையை அளிக்க இயலும்.
கட்டுரையாளர்: சவும்யாடிப் சட்டோபத்யாய் (Soumyadip Chattopadhyay)
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் தட்டுரையாளரின் சொந்த கருத்துகளே.
இதையும் படிங்க: வங்கதேசத்தின் அரசியல் நெருக்கடியும், அதற்கான காரணங்களும்!