நம் நாட்டின், ஒவ்வொரு மாநிலத்தின் பேச்சு மொழிகள் மற்றும் உணவு வகைகளை போல புடவைகளும் அதற்கான பாரம்பரியத்தை கொண்டுள்ளது. குறிப்பாக, இந்திய பெண்களின் உடை அலங்காரத்தில் இருந்து புடவையை பிரித்து பார்க்கவே முடியாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும், சமூகத்திற்கும் ஏற்றவாறு அழகாகவும், பல விதமாகும் அணியப்படும் சேலைகளை மற்ற மாநில பெண்களும் அணிய வேண்டும் என நினைப்பதுண்டு. அப்படி, இந்தியாவின் பிரபலமான 5 மாநில புடவைகளை பற்றி பார்க்கலாம் வாங்க..
தெலங்கானாவின் போச்சம்பள்ளி (Pochampally saree): பாரம்பரிய தறிகளை கொண்டு நெய்யப்படும் போச்சம்பள்ளி சேலைகளின் வடிவமைப்புகள் பல நூற்றாண்டுகள் பழமையானது. தெலுங்கானாவில் உள்ள பூடன் போச்சம்பள்ளி கிராமத்தில் இருந்து உருவான இந்த புடவைகள் பல தலைமுறைகளாக கையால் நெய்யப்பட்டு இந்தியாவின் மிகவும் பிரபலமான பாரம்பரிய புடவைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
போச்சம்பள்ளி சேலைகள் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் எந்த அளவிற்கு பிரபலமோ அதே, அளவிற்கு தமிழக பெண்களுக்கும் பிடித்த சேலையாக இருக்கிறது. போச்சம்பள்ளி புடவை ஜியாமெட்ரிக் இகாட் டிசைனில் மிக நுணுக்கமான வடிவங்களை கொண்டது. சேலை நெய்யப்படுவதற்கு முன்பு, துணியில் நூல்களைக் கட்டி, சாயமிடும் முறை நடைபெறுவதால் ஒவ்வொரு சேலைக்கும் தனித்துவமான வடிவமைப்புகள் கிடைக்கின்றன. அழகான நிறங்களுடன் புடவையின் இருபுறமும் ஒரே தோற்றத்துடன் இருக்கும். காட்டன், பட்டு, மற்றும் சில்க் காட்டன் வகையிலும் போச்சம்பள்ளி கிடைகிறது.
அசாமின் முகா (Muga Silk sarees): கையால் நெய்யப்பட்ட ஜவுளி மற்றும் பட்டு வளர்ப்பு பல நூற்றாண்டுகளாக அசாமின் கலாச்சார மற்றும் பொருளாதார சுற்றுச்சூழலில் உட்பொதிந்துள்ளது. முகா பட்டு, அதன் தங்க-மஞ்சள் நிறத்தைக் குறிக்கும் அசாமிய வார்த்தையான "முகா" என்பதிலிருந்து அதன் பெயரைப் பெற்றது. பட்டு நூலை வெளிப்படுத்தும் முகா புழுக்கள் குறிப்பிட்ட வகை இலைகளை மட்டும் உண்ணும். இதனால், இவை தனித்துவமான தரத்துடன் இருக்கின்றது. இவற்றின் ஜரி தங்கத்தில் நெய்யப்பட்டிருக்கும். கேரளாவின் செட் முண்டுவை போல இந்த புடவையும் இரு பகுதியை கொண்டிருக்கும்.
கேரளாவின் கசவு (Kasavu Saree) : கேரளாவின் பாரம்பரியத்தை உணர்த்தும் கசவு புடவைகளுக்கு 200 ஆண்டுகால வரலாறு உள்ளது. கல்லூரி தொடங்கி கல்யாணம் வரை, அனைத்து விஷேச தினங்களிலும் மலையாளப் பெண்கள் வெள்ளை நிறத்தில் தங்க நிற பார்டர் கொண்ட கசவு சேலையை உடுத்திருப்பதை நாம் பார்த்து ரசித்திருப்போம். புடவையில் இருக்கும் தங்க பார்டர் தான் சேலைக்கு கசவு என்ற பெயரை கொடுக்கிறது.
அனைத்து தர பெண்களும் பண்டிகையின் போது, பாரம்பரிய உடையை அணிந்து ஒற்றுமையை வளர்க்கின்றனர். பழங்காலத்தில், வெறும் துண்டு முண்டு மற்றும் கச்சையாகவே கேரளப் பெண்கள் உடுத்தி வந்த நிலையில், இன்று இது புடவை வடிவிலும் கிடைக்கிறது. இப்புடவைக்கு, பச்சை, சிவப்பு, அடர் ஊதா ப்ளவுஸ் அணிவது பொருத்தமாக இருக்கும். சமீபத்தில் வயநாடு எம்.பியாக பதவியெற்ற பிரியங்கா காந்தி கசவு சேலையை அணிந்திருந்தார்.
கர்நாடகாவின் மைசூர் புடவைகள் (Mysore Silk): தூய்மையான பட்டையும் தங்க ஜரிகையையும் சேர்த்து உருவாக்கப்படும் பட்டுப்புடவை தான் கர்நாடக மாவட்டத்தில் உள்ள மைசூரில் தயாரிக்கப்படும் புடவைகள். இந்த புடவையின் மென்மை தன்மையும், இதன் லேசான எடைக்காக உலகம் முழுவதும் பிரபலமாகும். திருமணம், பண்டிகை நாட்களில் இந்த மைசூர் புடவைகளை கட்டுவதற்கு உகந்ததாக இருக்கும்.
தமிழகத்தின் காஞ்சிவரம் சேலைகள் (Kanchivaram Sarees): கண் கவரும் வண்ணங்கள், விரிவான வடிவமைப்புகள் மற்றும் கலை நேர்த்திக்காக, கன்னியாகுமரி தொடங்கி காஸ்மீர் முதல் கடல் கடந்து உலகம் முழுவதும் அறியப்படுவது தான் காஞ்சிவரம் புடவைகள். மல்பெரி பட்டைப் பயன்படுத்தி நெய்யப்படும் காஞ்சிவரம் புடவைகள் பெரும்பாலும் தங்கம் மற்றும் வெள்ளி நூலை கொண்டு ஜரிகள் அமைக்கப்படுகிறது. புடவையை தாண்டி, இவை தமிழ்நாட்டில் ஆழ்ந்த கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இதன் சிறப்பிற்காகவே, தென் இந்திய நடிகைகள் தொடங்கி, வட இந்தியா நடிகைகள் வரை விரும்பி அணிகின்றனர்.
இதையும் படிங்க: பெண்கள் விரும்பும் காட்டன் சேலைகளில் இத்தனை வகையா!.. உங்ககிட்ட இதெல்லாம் இருக்கா?