தனியார் தொலக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி தமிழகத்தில் பிரபலம் என்றால், நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சம்பவங்கள் மேலும் பிரபலமாக மாறிவிடும். அப்படி, பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்களான அன்ஷிதா மற்றும் சாச்சனா இடையே சண்டையை ஏற்படுத்திய 'கேரளா தேங்காய் சம்மந்தி' தற்போது டபுள் பிரபலமாகியுள்ளது. அவர்கள் மத்தியில் வாக்கு வாதத்தை ஏற்படுத்திய கேரளா பிரபல உணவை நாமும் ஏன் வீட்டில் செய்து பார்க்கக்கூடாது?. 5 நிமிடங்களில் தயாராகும் சம்மந்தியை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க..இது சாதத்திற்கு பெஸ்ட் காம்பினேஷனாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 5
- இஞ்சி - 1 சின்ன துண்டு
- சின்ன வெங்காயம் - 10 முதல் 15
- புளி - 1 சின்ன நெல்லிக்காய் அளவு
- துருவிய தேங்காய் - 1 கப்
- கல் உப்பு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 2 கொத்து
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கேரளா சம்மந்தி செய்முறை:
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த மிளகாய், நறுக்கி வைத்த இஞ்சி, மற்றும் புளி சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கி அடுப்பை அணைக்கவும்.
- வதக்கிய பொருட்கள் நன்கு ஆறியதும், அதனை காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். பின்னர், அதனுடன் உப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், மிளகாய் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். (தண்ணீர் சேர்க்கக்கூடாது)
- பின்னர், அரைத்து வைத்ததை வேறு பாத்திரத்திற்கு மாற்றி உருண்டை பிடித்தால் கேரளா ஸ்டைல் தேங்காய் சம்மந்தி தயார்.
- சுடச்சுட சாதத்தில் நாம் தயார் செய்து வைத்துள்ள சம்மந்தியை போட்டு சாப்பிட்டு பாருங்க, குழம்பு பொரியலை தேடவே மாட்டீங்க. தயிர் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிடுவதற்கும் அருமையாக இருக்கும். அப்புறம் என்ன யோசனை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்களேன்.
- குறிப்பு: தேங்காய் எண்ணெய் பிடிக்காதவர்கள் உங்களுக்கு பிடித்த எண்ணெய்யில் செய்யலாம். ஆனால், சம்மந்தியை தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
- அரைத்து வைத்ததும், உருண்டை பிடிப்பதால் சம்மந்தி காய்ந்து போகாமல் இருக்கும்.
இதையும் படிங்க: