நாளுக்கு நாள் பச்சிளம் குழந்தைகள் குடிக்கும் பாலில் இருந்து மசாலா, மிளகாய், சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெய் என அனைத்தும் கலப்படமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், தற்போது சந்தையில் விற்கப்படும் மஞ்சளில் கலப்படம் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின்றனர்.
நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் மஞ்சள் கலப்படம் செய்யப்பட்டு இருந்தால் நாளடைவில் பல உடல்நலக் பிரச்சனைகளை ஏற்படும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். உங்கள் சமையலறையில் நீங்கள் பயன்படுத்தும் மஞ்சள் தூய்மையானதா? தெரிந்து கொள்ளுங்கள்..
மஞ்சள் தூள் கலப்படம்: மஞ்சள் தூளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பரிசோதனை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மஞ்சள் தூளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முதலில், ஒரு கிளாஸில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில், ஒரு தேக்கரண்டி மஞ்சளை சேர்க்கவும்.
மஞ்சள் தூய்மையாக இருந்தால், தண்ணீர் வெளிர் மஞ்சள் நிறமாக மாறி, கிளாஸின் அடிப்பகுதியில் மஞ்சள் தூள் படியும். இதுவே, கலப்படம் செய்யப்பட்ட மஞ்சளாக இருந்தால், தண்ணீர் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் தோன்றும். இந்த எளிய சோதனையை செய்வதால், கலப்படம் செய்யப்பட்ட மஞ்சளை எளிதில் கண்டறியலாம்.
கொம்பு மஞ்சளிலும் போலியா?: சந்தையில் கிடைக்கும் மஞ்சள் பொடிகள் கலப்படம் செய்யப்பட்டதாக இருக்கலாம் என அதை பயன்படுத்தாமல், கொம்பு மஞ்சள் வாங்கி அரைத்து பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால், கொம்பு மஞ்சளிலும் வண்ணங்கள் கலந்து சந்தையில் விற்கப்படுவது பற்றி உங்களுக்கு தெரியுமா?
கொம்பு மஞ்சளை வாங்குபவர்கள் போலிகளை வாங்கி ஏமாறாமல் கவனமாக இருக்க வேண்டும். இதற்காக, FSSAI போலி கொம்பு மஞ்சளை எப்படி கண்டறிவது என்பதை வீடியோ பதிவின் மூலம் விளக்கியுள்ளது. ஒரு கிளாஸ் தண்ணீரில், நீங்கள் வாங்கி வந்த கொம்பு மஞ்சளில் இரண்டு துண்டுகளை சேர்க்கவும். தண்ணீர் நிறம் மாற வில்லை என்றால் அது தூய்மையானது. அதே போலி கொம்பு மஞ்சளாக இருந்தால், தண்ணீர் நிறம் மாறத் தொடங்கும்.
கூடுதலாக,
- இயற்கையான மஞ்சள் ஒரு தனித்துவமான வாசனையைக் கொண்டிருக்கும். அதே கலப்படம் செய்யப்பட்ட மஞ்சளில் வாசனை இருக்காது.
- உண்மையான மஞ்சள் கையில் பிடித்தால் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். அதே கலப்படம் செய்யப்பட்ட மஞ்சள் சற்று கரடுமுரடாகஅல்லது கட்டியாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: மேற்குறிப்பிட்ட அனைத்து சுகாதார தகவல்களும் உங்களது புரிதலுக்காக மட்டும். அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்