ஆரம்பத்தில் இருந்து அறுவடை வரை, வீட்டு மாடியில் செடி முருங்கை எப்படி எளிமையாக வளர்க்கலாம் என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக கொடுத்துள்ளோம்..படித்து பயன்பெறுங்கள்.
விதை தேர்வு: நர்சரிகளில் கிடைக்கும் முருங்கை விதைகளை வாங்கி நடவு செய்யலாம். வெள்ளை தோல் போன்ற லேயர் விதையை சுற்றி இருப்பதை தேர்வு செய்தால் முளைப்பு திறன் நன்றாக இருக்கும். வாங்கி வந்த விதைகளை சீடிங் ட்ரே அல்லது தொட்டியில் நட்டு வைத்தால் ஒரு வாரத்தில் முளை வந்துவிடும்.
மண் கலவை: மணல் கலந்த செம்மண்ணில் செடி முருங்கை நன்கு வளரும். செம்மண் இல்லையென்றால், இரண்டு மடங்கு தோட்டத்து மண், ஒரு மடங்கு தொழு உரம், ஒரு மடங்கு வேப்பம் புண்ணாக்கு என அனைத்தையும் நன்றாக கலந்து ஏழு நாட்கள் ஈரப்பதத்தோடு வைத்திருக்க வேண்டும். இப்படி செய்வதால், மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி செடி வளர்வதற்கான சூழலை ஏற்படுத்தும். இந்த மண்ணில், 20 கிராம் அளவு பொட்டாஷ் பாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி போன்ற உரங்களையும் கலந்து கொள்ளலாம்.
குரோ பாக் அளவு: செடி முருங்கை வளர்வதற்கு பெரியளவிலான குரோ பாக் தேர்வு செய்வது அவசியம். முருங்கை முளை விட ஆரம்பித்து விட்டால், வேகமாக வேர் பிடிக்க தொடங்கி விடும். எனவே, 15*15 அல்லது 18*18 அளவு குரோ பாக்கில் தான் முருங்கை செடி வளர்க்க வேண்டும்.
கட் செய்து வளர்க்கும் முறை: முருங்கை செடி 4 அடி உயரத்திற்கு வளர்ந்த பின், கீழே இருந்து மேல், 2 அடி மட்டும் வைத்துவிட்டு மீதம் இருப்பதை கட் செய்து விட வேண்டும். கட் செய்யும் போது, க்ராஸாக அதாவது குறுக்கு வாக்கில் வெட்ட வேண்டும். இப்படி க்ராஸாக வெட்டுவதால், அதிக கிளைகள் வளர்வதோடு, காய்கள் அதிகமாக காய்க்கும் மற்றும் கீரைகள் அதிகமாக கிடைக்கும். வெட்டி விட்ட பகுதி காய்ந்து போகாமல் இருக்க, பலர் சானி உருண்டைப்பிடித்து வைப்பார்கள். இல்லையென்றால், கற்றாழை ஜெல் தடவலாம்.
வெயில் மற்றும் தண்ணீர்: முருங்கை மரம் வெயிலில் வளரக்கூடியது. வெயில் அதிகம் படும் இடத்தில் முருங்கையை நட்டு வைக்கவும். அதே போல, முருங்கைக்கு கம்மியான அளவு தண்ணீர் தான் தேவைப்படும். அதுவும், மண்ணில் இருக்கும் ஈரப்பதத்தை பார்த்து தண்ணீர் கொடுங்கள்.
மகரந்தச் சேர்க்கை (Pollination): முருங்கை செடியை சுற்றி அதிகமான பூச்செடிகளை வைக்க வேண்டும். இப்படி, செய்வதால், மகரந்தச் சேர்க்கை நன்கு நடந்து காய்கள் அதிகமாக வரும்.
உரம்: வாரத்திற்கு ஒரு முறை, உளுந்து மற்றும் அரிசி தண்ணீர் கொடுத்து வரலாம். உளுந்து மற்றும் அரிசி தண்ணீரை வடிகட்டி 1 மடங்கு உளுந்து தண்ணீருக்கு 10 தண்ணீர் ஊற்றி செடிகளுக்கு கொடுக்க வேண்டும். அதே போல, பெருங்காயத்தை செடியின் வேருக்கு பக்கத்தில் புதைத்து வைக்க வேண்டும். இப்படி செய்வதால், பெருங்காயத்தின் சாறு தண்டு முழுவதும் பரவி, செடிகயில் கம்பளி பூச்சி ஏற்படுவதை தடுக்கலாம். இந்த முறைகளை பின்பற்றி வந்தால், வீட்டு மாடியில் முருங்கை செடி எளிமையாக வளர்க்கலாம்.