பாம்பை பார்த்து பயப்படுபவர்களை போல், பல்லியை பார்த்து தலை தெறிக்க ஓடுபவர்களும் உண்டு. குறிப்பாக ஒரு சிலருக்கு வீட்டில் பல்லி இருப்பது தெரிந்தால் கையும், காலும் ஓடாது. அதிலும், பாத்ரூமில் பல்லி இருக்கிறது என்றால் அவ்வளவு தான்..அது வெளியே வரும் வரை சிலர் உள்ளே போக மாட்டார்கள். இப்படி, வீட்டில் அட்டகாசம் செய்யும் பல்லிகளை விரட்டுவதற்கு, வீட்டில் சில செடிகளை வளர்த்தால் போதும் என்றால் நம்ப முடிகிறதா?..அவை என்னென்ன? என்பதை பார்க்கலாம்..
துளசிச் செடி: மருத்துவ குணங்களுக்குப் பெயர் பெற்ற துளசிச் செடி, பல்லிகளை விரட்டவும் உதவியாக இருக்கிறது. துளசியில் இருக்கும் மெத்தில் சினமேட் மற்றும் லினாலூல் பண்புகள் துளசிக்கான தனித்துவமான வாசனையைக் கொடுக்கின்றது. ஆனால், இந்த வாசனை பல்லிகளுக்குப் பிடிக்காது என்பதால் வீட்டின் முற்றத்திலோ அல்லது வீட்டிற்குள் ஒரு சிறிய தொட்டியில் துளசிச் செடியை வளர்த்தால் பல்லிகள் வராமல் இருக்கும்.
புதினா செடி: சட்னி முதல் பிரியாணி வரை உணவில் முக்கிய பங்களிக்கும் புதினா, பல்லிகளை விரட்டும் என்றால் நம்ப முடிகிறதா?. காரணம், புதினா செடியில் இருக்கும் மென்தோல் (Menthol) என்ற தனிமம் தான். இதனால், செடியின் இலைகளிலிருந்து வெளிப்படும் வாசனை பல்லிகளுக்குப் பிடிப்பதில்லை. ஆகையால், வீட்டில் புதினா செடி வளர்த்தால் பல்லி தொல்லை கண்டிப்பாக இருக்காது.
சாமந்தி செடி: பண்டிகை நாட்களில் வீட்டை அலங்கரிக்கவும், கடவுள் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படும் சாமந்தி, வீட்டில் இருக்கும் பல்லிகளையும் விரட்டுகிறது. சாமந்தியில் இருக்கும் பைரெத்ரின் மற்றும் ட்ரேபீசியம் எனப்படும் பூச்சிக்கொல்லி தனிமங்கள் வீட்டில் பல்லிகளைத் தங்க விடுவது இல்லை. இந்த செடியிலிருந்து வரும் கடும் வாசனை பல்லிகளுக்கு ஏற்றது இல்லை என்பதால் அவை வீட்டை விட்டு ஓடிவிடுகின்றன.
எலுமிச்சை புல்(Lemongrass): எலுமிச்சை புல்லில் சிட்ரோனெல்லா என்ற வேதிப்பொருள் உள்ளதால், அது தனித்துவமான சிட்ரஸ் வாசனையை வெளியிடுகிறது. இந்த வாசனையைப் பல்லிகள் விரும்புவதில்லை. வீட்டிற்குள் இச்செடியை வளர்த்தால், பல்லிகள் நாற்றம் தாங்காமல் ஓடிவிடும்.
லாவெண்டர் செடி: அருமையான மனத்திற்குப் பெயர் பெற்ற லாவெண்டர் இயற்கையான பல்லி விரட்டியாகவும் செயல்படுகிறது. அதிலிருந்து வரும் ஆண்டிசெப்டிக் பண்புகளின் வாசனையைப் பல்லிகள் விரும்புவதில்லை. இந்த செடியை வீட்டில் வளர்த்தால் பல்லி தொல்லை குறைவது மட்டுமின்றி, இதன் பூக்கள் மூலம் வீட்டின் அழகையும் அதிகரிக்கலாம்.
இதையும் படிங்க: உங்கள் வீடு/கடைகளில் உள்ள எலிகளை விரட்ட எருக்கன் செடி போதும்..இப்படி பயன்படுத்தி பாருங்க..! |
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்