தாகா: வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கூட்டணி கட்சியான ஜதியா கட்சி அலுவலகம் தலைநகர் தாகாவில் உள்ளது. இந்த கட்சி அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதில் பகுதி அளவு எரிந்து நாசமானது.
வங்கதேச அவாமி லீக் தலைமையிலான கூட்டணியின் ஒரு அங்கமான ஜதியா கட்சியை உருவாக்கியவர் ஹூசைன் முகமது எர்சாத். கடந்த மூன்று பொதுத்தேர்தல்களிலும் இந்த கட்சி போட்டியிட்டது. இந்த நிலையில் ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தப்படும் என்று ஜதியா கட்சி அறிவித்திருந்தது. தாகாவின் மையப்பகுதியில் உள்ள காக்ரயிலில் உள்ள ஜதியா கட்சியின் மத்திய அலுவலகத்தின் வழியாக ஊர்வலமாக சென்றபோது மோதல் வெடித்தது.
அப்போது ஒரு சிலர் ஜதியா கட்சி அலுவகத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஜதியா கட்சி அலுவகத்தையும் அவர்கள் தாக்கி சேதப்படுத்தியதாக தெரிகிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது இதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸ் மற்றும் ராணுவம் குவிக்கப்பட்டது.
இது குறித்து பேசிய ஷேக் ஹசீனாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் கோனோ அவுதிகார் பரிஷத் கட்சியின் தலைவர் ஷகிலுஸ்ஸமன், "ஜதியா கட்சி அலுவலகத்துக்கு முன்பு ஊர்வலமாகச் சென்றபோது அந்த அலுவலகத்தில் இருந்து சிலர் எங்கள் மீது செங்கற்களை வீசி எறிந்தனர்.அவர்களுடைய அலுவலகத்துக்கு அவர்களே தீவைத்துக் கொண்டனர்,"என்றார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக நேர்ந்தது. இந்தியாவிற்கு அவர் தப்பி வந்தார். அப்போது ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நோபல் பரிசு பெற்ற முகமது யூனூஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி வகித்து வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்