வாஷிங்டன்: வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டனத்துக்குரியது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், "என்னுடைய ஆட்சியில் இதுபோல நடைபெற்றதில்லை. ஜோ பைடன், கமலா ஹாரீஸ் இருவரும் அமெரிக்காவிலும், உலகம் முழுவதும் உள்ள இந்திக்களை புறக்கணிக்கின்றனர்.நமது தெற்கு பகுதி எல்லையில் இஸ்ரேல் முதல் உக்ரைன் வரை பேரழிவை ஏற்படுத்தியுள்ளனர்.ஆனால், நாம் அமெரிக்காவை மீண்டும் வலுவானதாக மாற்றுவோம். வலுவின் மூலம் அமைதியை கொண்டு வருவோம்.
தீவிர இடதுசாரி கொள்கையாளர்களிடம் இருந்து அமெரிக்காவில் உள்ள இந்துகளை பாதுகாப்போம். உங்களுடைய சுதந்திரத்துக்காக நாங்கள் போராடுவோம். என்னுடைய நிர்வாகத்தின் கீழ் இந்தியாவுடனும், எனது நல்ல நண்பருமான பிரதமர் மோடியுடனான உறவை வலுப்படுத்துவோம்,"என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்கா ஃபர்ஸ்ட்டுக்கான இந்துக்கள் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் உத்சவ் சந்துஜா,"முன்னாள் அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றிக்குரிய பாராட்டுக்குரியவராக அவர் திகழ்கிறார். இந்த விஷயத்தில் கமலா ஹாரீஸ் கருத்து எதுவும் சொல்லவில்லை. இதன் மூலம் அமெரிக்க தேர்தலில் பெரிய மாற்றம் வரும்," என்றார். அமெரிக்காவில் உள்ள மேலும் சில இந்து அமைப்புகளும் டிரம்ப் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்