பலருக்கும் விருப்பமான மலராக இருக்கும் ரோஜாவை வீட்டில் வளர்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது? நர்சரிகளில் இருந்து எப்போது ரோஜா செடி வாங்கி வந்தாலும், பூ பூக்காமல் குச்சியாகவே இருக்கிறதா? என்ன செய்தாலும் என் வீட்டில் மட்டும் ரோஜா பூக்கவே மாட்டேங்குது என கவலை படுறீங்களா? இனி, கவலைய விடுங்க. கீழே கொடுக்கப்பட்டுள்ள உரங்களை பயன்படுத்தினால் 20 நாளில் செடியில் பூக்கள் பூக்கத் தொடங்கும். ட்ரை பண்ணி பாருங்க.
- மஞ்சளும் அரிசி தண்ணீரும்: ஒரு லிட்டர் தண்ணீரில் 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும். இதை 8 மணி நேரத்திற்கு அல்லது ஒரு நாள் இரவு அப்படியே விட்டு விடுங்கள். மறு நாள் காலையில் இந்த தண்ணீருடன், சாதம் வடித்த தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இந்த தண்ணீரை வாரத்திற்கு ஒரு முறை 200 மி.லி செடிக்கு கொடுக்கலாம். காலை 7.30 மணிக்கு முன்னரும், மாலை 5.30 மணிக்கு மேல் செடிக்கு ஊற்ற வேண்டும். இந்த உரத்தை செடிக்கு கொடுக்கும் தினத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. இதை பயன்படுத்தும் போது, ரோஜா பூ செடியில், பூ கொத்து கொத்தாக பூக்க தொடங்கும்.
- பால் மற்றும் அரிசி தண்ணீர்: ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் 3 நாட்களுக்கு ஊற வைத்து விடுங்கள். பாத்திரத்தை காட்டன் துனியால் மூடி வைக்க வேண்டும். பின்னர், நன்கு ஊறிய தண்ணீரை வடிகட்டி பிளாஸ்டிக் பாட்டிலில் 1 டம்ளர் ஊற்றவும். அதனுடன், 3 டம்ளர் காய்ச்சாத பசும்பால் சேர்த்து 5 நாட்களுக்கு நிழலில் வைத்து விடுங்கள்.
பின்னர், இதனை வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள். (இந்த நீர் 10 நாள் வரை கெடாமல் இருக்கும். 6 மாதங்கள் வரை வேண்டும் என்றால், 1 டீஸ்பூன் நாட்டு சக்கரையை இந்த நீரில் கலந்து ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள்) இப்போது, இரண்டு லிட்டர் தண்ணீரில் நாம் வடிகட்டு வைத்துள்ள நீரை 5 முதல் 6 மி.லி சேர்த்து கலந்து வாரத்திற்கு ஒரு முறை செடிகளுக்கு கொடுக்கலாம்.
- வெந்தயம் பொடி மற்றும் டீ தூள்: ஒரு கப் வெந்தயத்தை நைசாக அரைத்து, அதனுடன் 1 பாக்கெட் டீ தூள் சேர்த்து கலக்கவும். செடிக்கு உரம் கொடுப்பதற்கு முன்னர், மண்ணை நன்கு கிளறி 1 டேபிள் ஸ்பூன் இந்த பொடியை சேர்த்து மீண்டும் மண்ணை கிளறி விட வேண்டும். பின்னர், வழக்கம் போல் தண்ணீர் ஊற்றுங்கள். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வரும் போது, செடி பூத்து குலுங்கும்.
- இன்ஸ்டன்ட் டானிக்: ஒரு பாத்திரத்தில் 4 வெங்காய தோல், 3 முட்டை தோல் மற்றும் 3/4 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து ஆறவைக்கவும். இப்போது மற்றொரு பாத்திரத்தில் இந்த தண்ணீரை வடிகட்டி சேர்க்கவும்.
அதனுடன், அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் நாம் குப்பை என தூக்கி போடும் டீ தூள் சக்கையில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த கலவையில் 1 டம்ளர் எடுத்து வாரத்திற்கு ஒரு முறை பூச்செடிக்கு ஊற்றி வரலாம்.
- சாதம் மற்றும் வெல்லம்: ஒரு மண் பானையில் 1 கைப்பிடி சாதம் மற்றும் 1 டீஸ்பூன் வெல்லம் சேர்த்து நன்கு மூடி இரண்டு நாட்களுக்கு தனியாக வைத்து விடுங்கள். இரண்டு நாட்களுக்கு பின்னர், ஊற வைத்த 1 டீஸ்பூன் வெந்தயத்தை அரைத்து அதே மண்பானையில் சேர்த்து 1 நாள் ஊறவைக்கவும். அதன் பின்னர், இதில் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து 1 டப் தண்ணீரில் இதை சேர்த்து பூச்செடிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம்.
பயன்கள்:
- ரோஜா செடியில் வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் வரும் பூச்சிகளை வராமல் தடுக்கும்
- வேர் அழுகல் நோய் வரமால் இருக்கும்
- செடி தளிர் விட்டு பூக்கள் கொத்து கொத்தாக பூக்கும்
இதையும் படிங்க:
- குளிர்காலத்தில் துளசி செடி வாடிப்போகிறதா? நீங்கள் செய்யக்கூடாத விஷயங்கள் இதான்!
- மல்லிகை செடியில் கொத்து கொத்தா பூ பூக்கணுமா? வாரத்திற்கு ஒருமுறை 'இதை' ஸ்ப்ரே பண்ணுங்க!
- வெற்றிலை கொடி செழிப்பாக வளர 'இந்த' மண்ணில் நட்டு வையுங்கள்..பெரிய இலைகள் நிச்சயம்!
- வீட்டில் கறிவேப்பிலை செடி தளதள வென்று வளரணுமா? 'இந்த' இரண்டையும் வாரத்திற்கு ஒரு முறை தெளிங்க