ஹராரே: தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஜிம்பாப்வே (Zimbabwe). இங்கு மிகவும் மோசமான காலநிலை மாற்றம் நிகழ்வதால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் இன்றி மனிதர்கள், விலங்குகள் என அனைத்து உயிர்களும் மடிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உணவுத் தேவையுள்ள மக்களின் பசியைப் போக்குவதற்காக 200 யானைகளைக் கொல்ல ஜிம்பாப்வே அரசு அனுமதி அளித்துள்ளது.
சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் யானைகளைக் கொண்ட ஜிம்பாப்வே, நமீபியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் கடுமையான வறட்சியால், இரு நாட்டு அரசாங்கங்களும் இந்த முடிவை எடுத்துள்ளன. மேலும், இதற்காக ஜிம்பாப்வே தேசிய பூங்காக்களில் உள்ள யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: எல் நினோ Vs லா நினா.. வயநாடு நிலச்சரிவுக்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன?
இது குறித்து ஜிம்பாப்வே தேசிய பூங்காக்கள் மற்றும் வனஉயிரின மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டினாஷே ஃபராவோ, முறைப்படியான அனுமதி ஆணை கிடைத்த பிறகு உணவுத் தேவையுள்ள மக்கள் யானைகளை வேட்டையாட அனுமதிக்கப்படுவர் என்றார். மேலும், ஜிம்பாப்வேயில் உள்ள ஹவாங்கே தேசிய பூங்காவில் மனித - மிருக பசியின் தேவை அதிகம் உள்ளதால், அங்கு தான் யானைகள் வேட்டையப்பட உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மேலும், இந்த கடினமான சூழலுக்கு எல் நினோ காலநிலையின் மோசமான விளைவுகளே காரணம் என்றும், இந்த ஆண்டு டிசம்பருக்குள் மேலும் 100 யானைகள் உணவுக்காக தேவைப்படலாம் எனவும் ஃபராவோ கூறினார். அதேநேரம், ஹவாங்கேவில் தற்போது 45 ஆயிரம் யானைகள் உள்ளன. ஆனால், 15 ஆயிரம் யானைகளை மட்டுமே தாங்கும் திறன் கொண்டதாக பூங்கா இருக்கிறது என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு 83 யானைகள் உள்பட 700க்கும் மேற்பட்ட வனவிலங்குகளைக் கொல்ல நமீபியா அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்காக நமீபியாவின் 5 தேசிய பூங்காக்களில் உள்ள விலங்குகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இதுவரை 83 யானைகள், 30 நீர்யானைகள், 60 காட்டெருமைகள், 50 இம்பாலாக்கள், 300 வரிக்குதிரைகள் மற்றும் 100 இலாண்ட்கள் (Elands) என 723 வனவிலங்குகளைக் கொல்ல நமீபியா அரசு உத்தரவிட்டிருந்தது.