டெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம், அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தை கவனித்து வருவதாகவும் இந்த விவகாரத்தில் முறையான விசாரணையை எதிர்பார்ப்பதாகவும் இந்தியாவுக்கான பொறுப்பு துணை தூதர் குளோரியா பெர்பனா (Gloria Berbena) தெரிவித்து இருந்தார்.
இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக தலைநகர் டெல்லியில் உள்ள கிழக்கு அலுவலகத்தில் நேற்று (மார்ச்.27) அவர் ஆஜரானார். ஏறத்தாழ 30 நிமிடங்கள் இந்த விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தை அமெரிக்கா கவனித்து வருவதாகவும் அதில் முறையான மற்றும் வெளிப்படைத்தன்மை மிக்க விசாரணையை பேணுவதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்காவின் பொறுப்பு துணை தூதருக்கு எதிராக சம்மன் அனுப்பப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்வி குறித்து பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் கைது மற்றும் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கும் உள்ளிட்ட பிரச்சினைகளை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் இந்த விவகாரத்தில் அரசின் நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மையான விசாரணை மற்றும் உரிய நேரத்தில் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்கா வெளியுறவு செய்தித் தொடர்பாளரின் கருத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் சட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்ததை கடுமையாக எதிர்ப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
தூதரக ரீதியிலான உறவுகளை பொறுத்தவரையில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் உள்விவகாரங்களுக்கு அமெரிக்கா மதிப்பு அளிப்பதையே எதிர்பார்ப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் சட்ட நடவடிக்கைகள் என்பது உரிய நேரத்திற்கான சுதந்திர நீதித்துறையின் அடிப்படையை குறிக்கோளாக கொண்டது என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு! - Delhi HC Denies Kejriwal To Bail