ஹைதராபாத்: அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியானவர் யார் என்பதை தீர்மானிக்கும் உலகின் மிக சவாலான தேர்தல் நடைமுறை முடிவுக்கு வர உள்ளது. அமெரிக்கர்கள் வரும் 5ஆம் தேதி 47ஆவது அதிபர் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் கமலா ஹாரீஸ் வெற்றி பெற்றால் அவர் சுதந்திரமான உலகின் தலைவராக, முதலாவது தெற்கு ஆசியர் மற்றும் கருப்பினப் பெண் என்ற பெயரைப் பெறுவார். முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால், 1892ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிபர் ஆன ஒருவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு தோற்று, மூன்றாவது முறையாக போட்டியிடும்போது மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் என்ற பெருமையைப் பெறுவார். இதற்கு முன்பு இதே போல குரோவர் கிளீவ்லேண்ட் 1884ஆம் ஆண்டு அதிபராக இருந்தார். ஆனால், அடுத்து வந்த 1888 தேர்தலில் தோற்றார். பின்னர் மீண்டும் 1892ஆம் ஆண்டு தேர்தலில் அதிபராக வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் தேர்தல் முறை: உலகின் வேறு எந்த நாட்டை விடவும் அமெரிக்க தேர்தல் என்பது மிகவும் வித்தியாசமானதாகும். அதிபர் நேரடியாக வாக்காளர்களால் தேர்வு செய்யப்படுகிறார். இந்தியா, இங்கிலாந்து அல்லது கனடா நாடுகளில் நடக்கும் தேர்தலுக்கு மாறாக இந்த தேர்தல் இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாக்காளர்கள் தங்கள் தொகுதியின் எம்பியை தேர்வு செய்வார்கள். வெற்றி பெற்ற எம்பிக்கள் சேர்ந்து தங்கள் தலைவரை தேர்வு செய்வார்கள். அவரே பிரதமராக பதவி ஏற்பார்.
எனினும், நாடு முழுவதும் பதிவான வாக்குகளின் மொத்த எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்க அதிபர் தேர்வு செய்யப்படமாட்டார் என்று என்ற ஒரு குழப்பம் உள்ளது. அமெரிக்காவில் மக்கள் வாக்கெடுப்பு (popular vote) என்பது ஒரு அர்த்தமற்ற புள்ளிவிவரமாகும். ஒவ்வொரு மாநிலத்திலும் எலக்ட்டோரல் காலேஜ் வாக்கு முறையில் வேட்பாளர் வெற்றி பெறுவதே முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அமெரிக்க தேர்தல் என்பது அந்த தேசம் முழுமைக்குமான ஒரு தேர்வு முறை அல்ல. 50 மாநிலங்களின், மாநில வாரியான தேர்தலின் கூட்டுத்தொகையாகும்.
270 எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகள் பெறுபவர் வெற்றி பெறுகிறார். குறிப்பாக தேர்தல் களத்தில் பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன், ஜார்ஜியா, அரிசோனா, நெவாடா மற்றும் வட கரோலினா ஆகிய ஏழு மாநிலங்களில் வேட்பாளரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். RealClearPolitics இன் வாக்கெடுப்பு சராசரிகள், நவம்பர் 2 ஆம் தேதி வரை, பின்வரும் விளக்கப்படத்தைக் காட்டுகின்றன. தேர்தல் நாளில் டிரம்ப் இந்த முன்னிலையை பெற்றால், அவர் 47வது அதிபராக பதவியேற்பார்.
கருத்துக் கணிப்பு: அரசியல் கருத்துக் கணிப்பு என்பது எவ்வளவுக்கு எவ்வளவு அறிவியலோ அதே போல அது ஒரு கலையுமாகும். சுயாதீனமான, தொழில்முறை நிறுவனங்களால் நடத்தப்படும் உயர்தர வாக்கெடுப்புகளின் சராசரியை எடுத்துக்கொள்வது, ஒரு கணக்கெடுப்பை நம்புவதில் இருந்து பிழையைக் குறைக்க உதவும். RCP சராசரி இந்த விஷயத்தில் தரமானதாகும்.
தேர்தலுக்கு தேர்தல் நான்கு முக்கிய விஷயங்கள்தான் முதன்மை பெறுகின்றன என்று அமெரிக்கர்கள் கூறுகின்றனர். பொருளாதாரம்(பணவீக்கம், வேலைவாய்ப்பு, சம்பளம்), சட்டவிரோத குடியேற்றம்(டிரம்ப் ஆட்சியில் இருந்து விலகியது முதல் இதுவரை 2 கோடிபேர் எல்லையை தாண்டி குடியேறியுள்ளனர்), பெண்கள் உரிமை (அபார்ஷன் உள்ளிட்ட உரிமைகள்), வெளிநாட்டில் நடைபெறும் போர்கள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் நிலை ஆகியவையே அந்த நான்கு முக்கிய விஷயங்களாகும்.
அமெரிக்கர்களின் கருத்து: பைடனின் பேரழிவு கொள்கைகளில் இருந்து கமலா ஹாரீஸ் விலகி இருக்கிறார். எதிர்பார்த்ததை விடவும் குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டுள்ளதாக தற்போதைய வேலை குறித்த அறிக்கை தெரிவிக்கின்றது. அமெரிக்கா உக்ரைனுக்கு 200 பில்லியன் டாலர் உதவி செய்த போதும் கூட உக்ரைன் தொடர்ந்து தோல்வியை தழுவுகிறது. போர் உள்ளிட்ட வன்முறைகள் மத்திய கிழக்கு பகுதிக்கும் விரிவாகி உள்ளது. சர்வதேச உறவுகளில் பைடன்-ஹாரீஸ் முடிவுகள் குறித்து அமெரிக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 74 சதவிகித அமெரிக்கர்கள் அமெரிக்கா தவறான பாதையில் செல்வதாக கருதுகின்றனர். வரலாற்று ரீதியாகவே தவறான பாதைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தற்போதைய வேட்பாளர் இந்த விஷயத்தில் தோற்கக்கூடும்.
வெற்றி வேட்பாளரின் கள ரீதியிலான ஆட்டங்களே முடிவைத் தீர்மானிக்கும். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், பெரும்பாலான பெண்கள் கமலா ஹாரீஸை விரும்புகின்றனர். தன்னை வெற்றி பெற வைக்க பெண்களை அவர் நம்பி இருக்கிறார். ஹாரிஸ் போட்டிக்கான களமாக திகழும் மாநிலங்களில் வாக்களிக்கக்கூடிய தனது தளத்தின் ஆதரவை அவர் உற்சாகப்படுத்தினால் அவரால் வெற்றி பெற முடியும். எனினும் பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்கள்தான் குடும்பத்தை நடத்த உதவும் திறன் கொண்டவை என்பதால் அது குறித்தும் பெண்கள் அக்கறை கொள்கின்றனர்.
மின்னஞ்சல் முறையில் வாக்களிப்பு: அமெரிக்க வாக்களிப்பு என்பது மூன்று முறைகளைக் கொண்டுள்ளது. சில மாநிலங்களில் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி வாக்களிப்புத் தொடங்கி விட்டது. நேரில் வாக்களிக்கும் முறை நவம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. அதே போல மின்னஞ்சல் மூலமும் வாக்களிக்கலாம். சில மாநிலங்கள், அதாவது பெரும் நிலப்பரப்பு கொண்டவை அதே நேரத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட அலாஸ்கா போன்ற மாநிலங்களில் மின்னஞ்சல் மூலம் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
எனவே, நேரடி வாக்களிப்பு முறை முடிவடைந்தாலும் அந்த தேர்தலைக் கொண்டு மட்டும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவதில்லை. மின்னஞ்சல் மூலமாக போடப்படும் வாக்குகளும் எண்ணப்பட்ட பிறகே முடிவுகள் அறிவிக்கப்படும். உதாரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் பென்சில்வேனியா மாநிலத்தில் டிரம்ப் முன்னணியில் இருந்தார். அதே நேரத்தில் ஆயிரகணக்கான மின்னஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்ட நான்கு நாட்கள் கழித்து பைடன் அதிபராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அதே போல மூன்றாம் தரப்பு வேட்பாளர்கள் விஷயமும் உள்ளது. மிச்சிகன் மாநிலம் மிகவும் சிக்கலான தேர்தல் களமாகும். இங்கு குறிப்பிடத்தக்க அளவில் இஸ்லாமியர் வாக்குகள் உள்ளன. இஸ்ரேல் விவகாரத்தில் பைடன்-ஹாரீஸ் கொள்கைகள் காரணமாக 40,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்று அவர்கள் கருதுகின்றனர். ஜனநாயக கட்சிக்கு தொடர்ந்து வாக்களிக்கும் இவர்கள், மூன்றாம் தரப்பு வேட்பாளர் ஜில் ஸ்டெய்னுக்கு வாக்களிக்க திட்டமிட்டிருக்கின்றனர். இது போன்ற சூழலில் டிரம்ப்புக்கான வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
கடும் போட்டி: அரபு இஸ்ரேலிய அரசியல் பென்சில்வேனியா களத்திலும் எதிரொலிக்கிறது. பெரும்பாலானோர் பென்சில்வேனியாவின் ஆளுநர் ஜோஷ் ஷாபிரோவை துணை அதிபராக கமலா ஹாரீஸ் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.ஷபிரோ, ஒரு யூதர் என்பதால், நாடு முழுவதும் உள்ள அரபு அமெரிக்கர்களின் எதிர்ப்பு காரணமாக அவருக்கு மாறாக வேறு ஒருவரை கமலா தேர்ந்தெடுத்தார். அவரது முடிவு இப்போது வேறுவிதமான விளைவை ஏற்படுத்துகிறது. ஷாபிரோ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் பென்சில்வேனியா முன்பு நினைத்ததை விட கமலா ஹாரீஸுக்கு மிகவும் நெருக்கமாக இருந்திருக்கும்.
கடும் போட்டி நிலவுகின்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார். தோல்வி அடைபவர் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடுப்பார். போனமுறையைப் போல வன்முறை கூட நடக்கலாம். சுதந்திர உலகத்தின் அதிபரை தேர்ந்தெடுப்பதில் இத்தகைய காட்சிகளும் அரங்கேறக் கூடும்
யார் வெற்றி பெறுகிறார் அல்லது தோற்கிறார் என்பது விஷயமல்ல. ஒரு விஷயத்தில் அமெரிக்கர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். பெரும் நீண்ட தேர்தல் நடைமுறை சீசன் முடிவுக்கு வந்து விடும். இதன் பின்னர் தேர்தல் பரப்புரை விளம்பரங்கள் இருக்காது, குடும்பத்தினர், நண்பர்களுக்குள் தேவையற்ற உரையாடல்கள் இருக்காது. தேர்தல் தொடர்பான தற்போதைய நிகழ்நேர தகவல்களுக்காக சமூக வலைதளங்களில் கூடுதல் நேரம் செலவிடத் தேவையில்லை.
இறுதியில் அமெரிக்கா தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும்.