கொழும்பு (இலங்கை): தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் (வேலுபிள்ளை பிரபாகரன்) சகோதரர் மனோகரன் என்பவர், ஐரோப்பாவில் உள்ள டென்மார்க் பகுதியில் வசித்து வருகிறார். இவர் 1975ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது சகோதரர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கடந்த 2009ஆம் ஆண்டு மரணமடைந்து விட்டதாக பொதுத் தளத்தில் முதல் முறையாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரபாகரனின் உறவினர்கள் சிலர் குறிப்பாக, அவரது மகள் உயிரோடு இருக்கிறார் என்பது பொய்யான தகவல் என தமிழகத்தைச் சேர்ந்த சிலரின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து இலங்கையில் பிரபல செய்தி தளத்திற்கு (ft.lk) வேலுப்பிள்ளை மனோகரன் விளக்கம் அளித்துள்ளார். அதில் "2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை போரில் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மனைவி மற்றும் அவரது குழந்தைகள் என அனைவரும் மரணமடைந்து விட்டனர். அவர் வெளிநாட்டில் உயிருடன் இருப்பதாக பொய்யான தகவலை சிலர் பரப்பி வருகின்றனர். அவரது மூத்த சகோதரன் என்ற முறையில் அத்தகைய பொய்யான தகவல்களுக்கு நானே பொறுப்பு ஏற்கிறேன்" எனத் தெரிவித்தார்.
மனோகரனின் இந்த நேர்காணலை அந்நாட்டின் முன்னணி செய்தித் தளங்கள் அனைத்தும் பகிர்ந்துள்ளது. மேலும், பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருடன் இருப்பதாகக் கூறி இலங்கையில் புலம்பெயர் தமிழ் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் பெரும் மோசடியில் பலர் ஈடுபட்டு வருவதாக இலங்கையில் செய்தித் தளம் (ft.lk) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, "எனது சகோதரர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மரணமடைந்து தியாகத்தை அடைந்துள்ளனர். இதனை உண்மை என ஏற்றுக் கொள்வது முக்கியமானதாகும். மேலும், எனது சகோதரர் மற்றும் அவரது குடும்பம் உயிருடன் இருப்பதாகக் கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த சில மாதங்களாக, இளம்பெண் ஒருவர் தன்னை பிரபாகரனின் மகள் என பொய்யாகக் கூறி வருகிறார். மேலும், இதனை சுட்டிக்காட்டி இலங்கையில் புலம்பெயர் தமிழ் மக்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது” என மனோகரன் கூறியதாக இலங்கையின் டெய்லிமிரர் (dailymirror.lk) எனும் செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாலஸ்தீனத்திற்கு ஆதரவுக்கரம்... மாலத்தீவில் இஸ்ரேலியர்களுக்கு தடை- அதிபர் முகமது முய்சு!