சா பவுலா: தெற்கு பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஊரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. கனமழை வெள்ளத்தில் சிக்கி ஏறத்தாழ 39 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 60க்கும் மேற்பட்டோரை தேடி வருவதாக பிரேசிலின் சிவில் டிஃபென்ஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
ஏறத்தாழ 80 ஆண்டுகளில் காணாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்ததாக தேசிய வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரு மழை வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தில் வீடுகள், உடைமைகள் அடித்துச் செல்லப்பட்டதால் சொந்த வீடுகளை விட்டி வெளியேறி ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை பென்டோ கான்கிளேவ்ஸ் மற்றும் கொடிபுரா பகுதியில் உள்ள நீர்மின்சார உற்பத்தி நிலையத்தின் அணை உடைந்ததாகவும் அதிலிருந்த வெளியேறிய நீர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களை அடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தீடீர் பேரிடர் காரணமாக 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், தெற்கு பிரேசிலில் உள்ள லஜியாடோ, எஸ்ட்ரெலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாக சிவில் டிஃபென்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பெரு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உதவிகளை வழங்கவும், வீடு மேற்கூரைகளில் தஞ்சம் அடைந்தவர்களை மீட்கவும் ஹெலிகாப்டர்கள் ஓயாத பணியில் ஈடுபட்டு வருகிறது.
வரலாற்றில் பிரேசில் கண்ட 4வது பெரிய பேரிடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2023 ஆண்டு ஜூலை, செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏற்பட்ட கனமழை பெருவெள்ளத்தில் ஏறத்தாழ 75 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1941 ஆம் ஆண்டுக்கு பிறகு பிரேசிலில் அதிகளவில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டது 2023ஆம் ஆண்டு தான்.
கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவில் பிரேசிலின் பல்வேறு நகரங்களில் மழைப் பொழிவு காணப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடு வாசல்களை இழந்து நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.