சியோல்: நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் கிளர்ச்சியை ஏற்படுத்த சதி செய்வதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தியை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் இன்றிரவு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, "தமது தலைமையிலான அரசின் நிர்வாகத்தை முடக்க எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன" என்று அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும், "ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றம் அதை அழிக்கும் இடமாக மாறிவிட்டது" எனவும் அவர் பேசியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தியை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
" வடகொரியாவின் கம்யூனிச சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தாராளவாத தென் கொரியாவைப் பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுகிறது. இது மக்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தவிர்க்க முடியாத நடவடிக்கையாகும், மேலும் அரசுக்கு எதிரான சக்திகளால் தூண்டப்பட்ட அமைதியின்மைக்கு எதிராக தேசத்தின் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்றும் அதிபர் தமது உரையில் கூறியதாக அல் ஜசீராவின் செய்தியை குறிப்பிட்டு ஏஎன்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022 இல் தென் கொரிய அதிபராக யூன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அவர் திட்டமிட்டிருந்த பட்ஜெட் மசோதா தொடர்பாக ஜனநாயகக் கட்சியுடன் அவருக்கு மோதல் போக்கு தொடர்ந்து வந்த நிலையில் தற்போது அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
1980 களின் பிற்பகுதியில் ராணுவ சர்வதிகாரம் முடிவுக்கு வந்தபின் , தென்கொரிய அதிபர் ஒருவர் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.