டெல்லி: லண்டனிலிருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போயிங் 777 (boeing 777) விமானத்தில் 211 பயணிகளும், 18 விமான குழுவினரும் பயணித்தனர். அப்போது 37000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், திடீரென்று 31000 அடிக்கு தரையிறங்கியது. அப்போது ஏற்பட்ட பயங்கர காற்று கொந்தளிப்பால் (Air turbulence) பயணிகள் விமானத்தில் அங்கும் இங்குமாக தூக்கி வீசப்பட்டனர்.
விமானத்தில் இருந்த பொருட்களும் தூக்கி வீசப்பட்டது. உடனே விமானம் தாய்லாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த பயங்கர விபத்தில் 73 வயது பயணி உயிரிழந்தார். மேலும் விமானத்தில் பயணித்த 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த அச்சமூட்டும் சம்பவம், விமான பயணத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.
காற்று கொந்தளிப்பு என்றால் என்ன?: காற்று சீரற்ற முறையில் வீசும் போது காற்று கொந்தளிப்பு (Air turbulence) ஏற்படும். பயங்கரமான முறையில் காற்று கொந்தளிப்பு ஏற்படும் போது விமானங்களின் பறக்கும் உயரத்தில் பாதிப்பு ஏற்பட்டு, விமானம் சில நிமிடங்களில் பல ஆயிரம் தூரம் தரையிரங்கும் அபாயம் ஏற்படும். அந்த நேரத்தில் விமானத்தில் உள்ள பொருட்கள் தூக்கி வீசப்படும்.
காற்று கொந்தளிப்பு ஏற்பட காரணம்?: காலநிலை மாற்றங்களே இந்த காற்று கொந்தளிப்பிற்கு காரணம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் காலநிலை மட்டுமே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவதில்லை. காற்று கொந்தளிப்பு ஏற்படுவதற்கு முன்னரே ஏற்படுத்தும் எச்சரிக்கையை உணர்ந்து பைலட்கள் விமானத்தை அதற்கேற்றவாறு செலுத்த வேண்டும். விமான பயணிகள் காற்று கொந்தளிப்பின் போது தப்பிக்க சீட் பெல்ட் அணிவது மிகவும் முக்கியமாகும். சீட் பெல்ட் அணிவதன் மூலம் மிகப்பெரும் காயங்களில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என கூறுகின்றனர்.
இந்தியாவில் ஏற்பட்ட விமான விபத்துக்கள்: இந்தியாவில் வானில் பயங்கர காற்று கொந்தளிப்பின் போது, உயிரிழப்பு ஏற்படுவது அரிதான ஒன்றாகும். முன்னதாக இதுபோல் 46 முறை காற்று கொந்தளிப்பால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய விமான போக்குவரத்து துறையின் அறிக்கையின் படி, 2018இல் 8 விபத்தும், 2019இல் 10 விபத்தும், 2020இல் 7 விபத்தும், 2021இல் 9 விபத்தும், 2022இல் 12 விபத்தும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 2020 முதல் 2022 வரை மொத்தம் 23 முறை விமானங்கள் தொழில்நுட்ப காரணங்கள், காற்று கொந்தளிப்பு உள்ளிட்ட அவசர காரணங்களுக்காக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விமான பயணத்தின் போது காற்று கொந்தளிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு ஒருவர் காயமடைந்து பின்னர் வெகு நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார். இந்தியாவில் 1980இல் விமான பயணத்தின் போது ஏற்பட்ட பயங்கர காற்ற கொந்தளிப்பில் 2 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: யார் இந்த இப்ராஹிம் ரைசி? - அரசியல் வாழ்க்கையும் சர்ச்சைகளும்..! - Ebrahim Raisi Latest News