டெல்லி: வங்கதேசத்தில் சுதந்திரப்போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாகக் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறி 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த பிரச்சனையால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 76 வயதான ஷேக் ஹசீனா கடந்த திங்கட்கிழமை டெல்லியில் உள்ள தனது சகோதரி ஷேக் ரெஹானா வீட்டில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்துள்ளார்.
வங்கதேசத்தில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பதற்றத்தில் உள்ளனர். சுமார் 4000 கிலோ மீட்டர் தூரம் எல்லைப் பகிர்வு உள்ளதால் இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போதைய நிலைமை குறித்து ஈடிவி பாரத் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் ஜாய் உடன் பேசியது. அப்போது பதிலளித்த அவர், "ஷேக் ஹசீனா டெல்லியில் இருக்கிறார். இப்போதைக்கு வெளியேறும் திட்டம் எதுவும் இல்லை, எங்கள் கட்சித் தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அரசியலமைப்பு ரீதியாக ஷேக் ஹசீனா ஒருபோதும் ராஜினாமா செய்யவில்லை, அவர் வங்கதேசத்தின் பிரதமராகவே தொடர்கிறார். எங்கள் கட்சித் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள், வன்முறைகள் நடந்து வருகின்றன. இதனால் வேறுவழியின்றி இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார்.
ஷேக் ஹசீனா திரும்ப வந்து அவாமி லீக் கட்சியை வழிநடத்துவாரா? என்ற கேள்விக்குப் பதில் அளித்த சஜீப், "அவாமி லீக் கட்சி வங்கதேசத்தின் மிகப் பெரிய மற்றும் பழமையான கட்சி, நாங்கள் இறக்கவில்லை, நாங்கள் எங்கும் செல்லப்போவதும் இல்லை, அவாமி லீக் மீண்டும் வரும் என்றதோடு, இப்படிப்பட்ட சிக்கலான தருணத்தில் தனது தாய்க்கு உதவிய இந்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி" எனக் கூறினார்.
சிறுபான்மையினர் மீது தாக்குதல்: தொடர்ந்து பேசிய சஜீப், "வங்கதேசத்தில் தற்போது துரதிர்ஷ்டவசமாகச் சிறுபான்மையினர் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படுகிறது. இங்கு அமைதியான மதச்சார்பற்ற அரசு தேவை, தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடத் தயாராக இருக்கும் அரசு தேவை, போர் குணத்தை முற்றிலும் கண்டிக்கிறேன் என்றதோடு, டாக்கா நகரம் மட்டும் ஓரளவு கட்டுக்குள் இருப்பதாகவும் மற்ற பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இன்னும் இருக்கிறது" என ஈடிவி பாரத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
வங்கதேசத்தில் 90 சதவீதத்திற்கும் மேல் இஸ்லாமியர்கள் உள்ள நிலையில் இந்துக்கள், புத்தீஸ்ட், கிறிஸ்துவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களிள் வீடியோக்கள் பரவி வரும் நிலையில், ஷேக் ஹசீனாவின் மகன் இந்த கருத்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் தொடரும் வன்முறை.. ஷேக் ஹசீனா டெல்லியில் தஞ்சம்.. வீடுகளில் புகுந்து ஆடைகள் திருட்டு!