அமெரிக்கா: இசைத்துறையில் மிக முக்கிய விருதாகப் பார்க்கப்படும் கிராமி விருதை வெல்வது என்பதே இசைக்கலைஞர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகப்பெரிய லட்சியமாக இருக்கும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 66வது கிராமி விருது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று (பிப்.5) நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவிற்கு கிராமி விருது கிடைத்துள்ளது.
பாடகர் சங்கர் மகாதேவன், கிதார் கலைஞர் ஜான் மெக்லாலின், தபேலா கலைஞர் சாஹிர் உசைன், தாள கலைஞர் (percussionist) செல்வகணேஷ் மற்றும் வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோர் அடங்கிய சக்தி இசைக்குழு, "திஸ் மொமண்ட்" (This Moment) என்ற 8 பாடல்கள் அடங்கிய ஆல்பத்தினை உருவாக்கியிருந்தனர்.
இந்த நிலையில், சக்தி இசைக்குழுவின் இந்த ஆல்பத்திற்கு சிறந்த குளோபல் மியூசிக் ஆல்பத்திற்கான (Best Global Music Album) பிரிவில் இசைத்துறையின் உயரிய விருதான கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் விருது பெற்ற சக்தி இசைக்குழுவிற்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: 12 நாட்களில் 24 லட்சம் பேர் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் - பிரதமர் மோடி பெருமிதம்!