அபுஜா: வட மத்திய நைஜீரியாவின் பிளாட்டூ மாகாணத்தில் புஸா புஜ்ஜி பகுதியில் செயின்ட்ஸ் அகடாமி என்ற பள்ளி இயங்கி வந்தது. இரண்டு மாடி கட்டடத்தில் இயங்கி வந்த இந்த பள்ளி திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வழக்கம் போல் பள்ளி இயங்கிக் கொண்டு இருந்த போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் போது நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளியில் இருந்த நிலையில், அனைவரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். மாணவர்கள் உள்பட ஏறத்தாழ 154 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இடிபாடுகளில் சிக்கிய 132 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நைஜீரியா தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 22 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்த அருகாமை கிராம மக்கள் உடனடியாக திரண்டு மீட்பு பணியில் ஈடுபட்டதால் பலர் எவ்வித உயிர் சேதமும் இன்றி விரைவாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றுப் படுகையின் அருகில் இருந்தது மற்றும் மிக பழமையான கட்டடம் உள்ளிட்டவற்றின் காரணமாக பள்ளி இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என நைஜீரிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் கொண்டு வந்த தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா! - resolution in un general assembly