புதுடெல்லி: ரஷ்யா- உக்ரைன் போர் குறித்தும், அமெரிக்கா நடத்திவரும் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு பற்றியும் இந்தியாவுக்கான ரஷ்யாவின் பாதுகாப்பு விவகாரங்கள் துறை பொறுப்பாளர் ரோமன் பாபுஷ்கின் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர்," ரஷ்யா - உக்ரைன் போருக்கான மூலக்காரணம் குறித்து இந்தியாவுக்கு ஆரம்பம் முதலே தெளிவான புரிதல் உள்ளது. இந்த விவகாரம் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயானது அல்ல. மாறாக, ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயானது. இதில் அவர்கள் உக்ரைனை, ரஷ்யாவுக்கு எதிரான, தங்களது பகடைக்காயாக பயன்படுத்தி வருகின்றனர்" என்று பாபுஷ்கின் கூறியுள்ளார்.
" ரஷ்ய பிராந்தியங்களில் இருந்து உக்ரைனிய துருப்புகள் திரும்பப் பெறப்பட வேண்டும், எல்லைப் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும், உக்ரைன் நடுநிலையான, அணிசேரா மற்றும் அணுசக்தி இல்லாத நாடாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகளை ரஷ்ய அதிபர் புதின் கடந்த மாதம் 14 ஆம் தேதி (ஜுன் 14) முன்வைத்தார். நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்ப்பது என்ற மேற்கத்திய நாடுகளின் முடிவால் ரஷ்யாவுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நிபந்தனைகளை ரஷ்யா விதித்திருந்தது. இந்த நிபந்தனைகள் ஏற்றுகொள்ளப்பட்டால் போரை கைவிட தயார் என்றும் ரஷ்யா அறிவித்திருந்தது" எனவும் பாபுஷ்கின் கூறினார்.
We are more united and capable – ready to prevail over any military challenge and determined to defend the future for the next generation.
— U.S. Mission to NATO (@USNATO) July 11, 2024
At the #NATOSummit in Washinton heads of state and government meet for the first time as 3️⃣2️⃣ NATO Allies.
The main purpose of NATO is to… pic.twitter.com/VSHJOh2gMl
இதனிடையே, ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிராக, உக்ரைனுக்கு நேட்டோ நாடுகளின் ஆதரவு தொடரும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார். பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் முடிவுற்ற நாளில் அமெரிக்க அதிபரிடம் இருந்து வந்துள்ள இந்த அறிவிப்பு குறித்து கேட்டபோது, " உலகின் இரண்டு சுதந்திரமான சக்தி வாய்ந்த நாடுகளின் (இந்தியா, ரஷ்யா) தலைவர்கள் சந்தித்து பேசியதை கண்டு மேற்கத்திய நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன" என்று பாபுஷ்கின் தெரிவித்தார்.
மேலும், " தங்களை மையமாகக் கொண்ட உலகளாவிய ஒருமுக அரசியலையே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விரும்புகின்றன. அவர்களின் இந்த விருப்பத்திற்கு மாறாக, பன்முக அரசியல் உருவெடுப்பதை அவர்கள் ரசிக்கவில்லை. இதன் அடிப்படையில் பார்த்தால், நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படவில்லை. மாறாக, ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைனை காப்பது என்ற பேரில் அந்நாட்டுக்கு எப்படி கூடுதல் ஆயுதங்களை அளிக்கலாம் என்பது குறித்து ஆராயவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது" என்று ரோமன் பாபுஷ்கின் காட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 32 நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பின் உச்சி மாநாடு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கி இன்று வரை (ஜூலை 11) மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: "இந்திய பிரதமர் மோடியின் செயல் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம்!