ETV Bharat / international

QUAD எப்போதையும் விட வலுவானதாக உருவெடுத்துள்ளது.. மாநாட்டிற்குப் பின் கூட்டறிக்கை! - Quad Summit in Delaware - QUAD SUMMIT IN DELAWARE

உத்திகள் ரீதியாக 'குவாட்' சீரமைக்கப்பட்டு முன்னெப்போதையும் விட வலுவானதாக திகழ்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு 'QUAD' உண்மையான, நேர்மறையான மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் நன்மைக்கான சக்தியாகும் என மாநாட்டிற்குப் பின் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாடு
அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாடு (Image Credit - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2024, 10:28 AM IST

Updated : Sep 22, 2024, 10:44 AM IST

வில்மிங்டன்: அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கூட்டமைப்பான 'குவாட்' (QUAD) முன்னெப்போதையும் விட வலுவானதாக உருவெடுத்துள்ளதாக 'குவாட்' உச்சி மாநாட்டிற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் 'குவாட்' என்ற பெயரில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. நீண்ட கால இந்த முன்மொழிவுக்கு கடந்த 2017ல் செயல் வடிவம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு 4வது 'குவாட்' உச்சி மாநாடு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சொந்த ஊரான டெலாவேரில் உள்ள வில்மிங்டனில் நேற்று நடைபெற்றது.

இதில், ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்குப் பிறகு குவாட் கூட்டமைப்பு இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; உத்திகள் ரீதியாக 'குவாட்' சீரமைக்கப்பட்டு முன்னெப்போதையும் விட வலுவானதாக திகழ்கிறது.

'குவாட்' இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு உண்மையான, நேர்மறையான மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் நன்மைக்கான சக்தியாகும். இப்பிராந்தியத்தில் நான்கு முன்னணி கடல்சார் ஜனநாயக நாடுகளாக, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியின் இன்றியமையாத அங்கமாக மற்றும் இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதற்கு சந்தேகத்திற்கு இடமின்றி 'குவாட்' திகழ்கிறது.

இதையும் படிங்க: இலங்கையின் முதல் மார்க்சிஸ்ட் தலைமை? அதிபராகிராறா திசாநாயகே?

தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதிகளில் சீனா பிராந்தியப் பூசல்களில் ஈடுபட்டுள்ளது. தென் சீனக் கடல் முழுவதற்கும் சீனா தனது இறையாண்மையைக் கோருகிறது. அதேநேரத்தில் வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், புருனே மற்றும் தைவான் ஆகியவை எதிர் உரிமைகோரல்களைக் கொண்டுள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் வகையில் சமீபத்தில் சட்டவிரோத ஏவுகணை வீசப்பட்டதை குவாட் கண்டிக்கிறது. கெரோனா தொற்றின் போது 'குவாட்' வெற்றிகரமாக இணைந்து செயல்பட்டது. குவாட் நாடுகளின் அறிவியல் மற்றும் மருத்துவத் திறன்கள், தனியார் மற்றும் இலாப நோக்கற்ற துறைகளின் பங்களிப்புகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் பிராந்தியத்தில் புற்றுநோய்க்கு தீர்வு காண இணைந்து செயல்படுவோம்" என அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கு 7.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்' (HPV) மாதிரி கருவிகள், கண்டறிதல் கருவிகள் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகளை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது.

குவாட் கூட்டமைப்பானது சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியின் வளர்ச்சியை உள்ளடக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ள அதே வேளையில், இப்பிராந்தியத்தில் தனது எழுச்சியை இக்கூட்டமைப்பானது கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என சீனா கூறியுள்ளது.

Last Updated : Sep 22, 2024, 10:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.