கொழும்பு: எதிர்வரும் தேர்தலில் தான் அதிபர் வேட்பாளராக களமிறங்குவது உறுதி என்று இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
சமீபகாலமாக நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துவந்த இலங்கையில் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று, அந்நாட்டின் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் (ஜுலை 26) அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், காலே நகரில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், "எதிர்வரும் அதிபர் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிடுவதென்று முடிவு செய்துள்ளேன். அதன்படி இத்தேர்தலில் மீண்டும் நான் அதிபர் வேட்பாளராக களமிறங்குவேன் என்பதையும், அதற்கான கட்டுப்பணத்தை கட்டியிருக்கிறேன் என்பதையும் இந்த பிரசாரத்தின் மூலம் தெரிவித்து கொள்கிறேன்." என்று கூறினார்.
ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் பலவீனமான நிலையை கருத்தில் கொண்டு, அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் போட்டியிடமாட்டார்கள் என்று உலவி வந்த ஊகங்களுக்கு தமது இந்த அறிவிப்பின் மூலம் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் மேற்கொண்ட கடினமான பணியை நிறைவேற்றியவன் என்ற உரிமையில், தற்போது அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்" என்றும் இலங்கை அதிபரும், நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கே பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்ததையடுத்து, கடந்த 2022 ஆம் ஆண்டு அங்கு மக்கள் போராட்டம் வெடித்தது. அதன் விளைவாக, ஆட்சியில் இருந்த அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டனர். நாட்டை மறுகட்டமைக்க வேண்டிய கடினமான சூழலில், 2022 மே மாதம் இலங்கை அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியுடன் அதலபாதாளத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை தான் மெல்ல மெல்ல மீட்டதாக ரணில் கூறி வருகிறார்.
இதையும் படிங்க: இலங்கை அதிபர் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!