ஐக்கியநாடுகள்: ஐநா பொது சபையின் 79வது கூட்டத்தின் பொதுவிவாதத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், காஷ்மீர் விவகாரம் குறித்து பேசும் போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு பதில் அளித்து பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்த மிஷினின் முதல் செயலாளர் பவிகா மங்கலநந்தன், "தீவிரவாதம், போதைப் பொருள் வர்த்தகம், பன்னாட்டு குற்றம் ஆகியவற்றால் உலகப் புகழ் பெற்றுள்ள ராணுவத்தால் நடத்தப்படும் ஒரு நாடு, உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் மீது விளைவுகள் புரியாமல் தாக்குகிறது. இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய தீவிரவாதம் காரணமாக மோசமான விளைவுகளை அந்த நாடு சந்திக்க நேரிடும்.
அண்டை நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக, எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் நீண்ட காலமாக உபயோகப்படுத்துவது உலகத்துக்கே தெரியும். அது எங்களது நாடாளுமன்றத்தை தாக்கியது, எங்களது நிதி தலைநகரான மும்பையை, சந்தை பகுதிகளை, ஆன்மீக இடங்களை தாக்கியது, அவர்களின் தீவிரவாத பட்டியல் மிகவும் நீளமானது. இது போன்ற ஒரு நாடு வன்முறையைப் பற்றி பேசுவது மோசமான பாசாங்குத்தனமாகும்.
தேர்தல் மோசடிகளுக்கு புகழ் பெற்ற வரலாற்றைக் கொண்ட நாடான பாகிஸ்தான், அரசியல் ரீதியான தீர்வு குறித்து பேசுகிறது. ஜம்மு-காஷ்மீர் தேர்தல்களை சீர்குலைக்கும் பணிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர். காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பகுதி. 1971ஆம் ஆண்டு இனப்படுகொலையில் ஈடுபட்ட பாகிஸ்தானில் இன்றும் கூட சிறுபான்மையினர் தவறாக நடத்தப்படுகின்றனர். பாகிஸ்தான் உண்மையில் எவ்வாறு இருக்கிறது என்பதை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது," என்று கூறினார்.