வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் ரேசில் இருந்து ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான ஜோ பைடன் விலகி உள்ளார். மேலும், அதிபர் தேர்தலில் அவருக்கு மாற்றாக கமலா ஹாரிஸ் போட்டியிட வேண்டும் என்றும் அவருக்கு ஆதரவு அளிப்பதாகவும் பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த முறை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்க்கு தனது முழு ஆதரவை வழங்க விரும்புவதாக போட்டியில் இருந்து விலகிய பின் அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய முன்னாள் அமெரிக்க அதிபரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டிரம்ப், அதிபர் பைடன் மற்றும் கமலா ஹாரீஸ் ஆகிய இருவரும் திறமையற்றவர்கள் என்றும், பைடனில் தோல்வி முயற்சிகளை உடன் இருந்து செயல்படுத்தியவர் கமலா ஹாரீஸ் என்றும் தெரிவித்து உள்ளார்.
மேலும், பைடன் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இருந்து தன்னை வெளியேற்றிக் கொள்ள முடியாது என்றும், ஏனெனில் அவர் மனதளவில் மிகவும் திறமையற்றவர் இன்னும் அவர் வெள்ளை மாளிகையில் தொடர்கிறார் என்றும் தெரிவித்து உள்ளார். கமலா ஹாரிஸ் பைடனைப் போலவே மிகுந்த நகைப்புக்குரியவர் என்றும் ஜோ பைடனை விட ஹாரிஸ் நாட்டு மக்களுக்கு மிக மோசமான தலைவராக இருப்பார் என்று கூறியுள்ளார்.
துணை அதிபர் கமலா ஹாரிசை தேர்தலில் வீழ்த்துவது எளிதாக இருக்கும் என தான் கருதுவதாக ட்ரம்ப் தெரிவித்தார். நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் இந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று நாட்டைக் காப்பாற்றவோம் என்றும் மீண்டும் அமெரிக்காவை உலகின் மிகப் பெரிய வல்லரசாக மாற்ற முடியும் என்றார்.
அமெரிக்காவின் எல்லைகளை சட்டவிரோதமாக திறந்து விட்ட 2 கோடி சட்டவிரோத அகதிகளுக்கு பைடன் புகலிடம் கொடுத்துள்ளதாகவும், அதன் மூலம் வரி பிரச்சினை மற்றும் நாடு முழுவதும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ஒரு காலத்தில் பெரிய பொருளாதாரத்தை கொண்டு இருந்த அமெரிக்காவை நாசமாக்கி, நாட்டில் பணவீக்கத்தை உருவாக்கி, அமெரிக்கர்கள் மளிகை மற்றும் எரிவாயு பொருட்களை கூட தேர்வு செய்து வாங்க வேண்டிய சூழலுக்கு கொண்டு சென்றதாகவும் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மன்னார்குடி டூ வாஷிங்டன்.. அமெரிக்க அதிபர் ஆவாரா கமலா ஹாரீஸ்! - US President Candidate kamalaharris